சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
நாளை முதல் அமலுக்கு வரவிருக்கும் சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச் சாவடிகளில், இன்று நள்ளிரவு (நாளை முதல்) ரூ.5 முதல் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
ஏற்கனவே விலைவாசி, வரி, கட்டண உயர்வு காரணமாக மக்கள் சிரமப்படுகிற சூழ்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மீண்டும் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் மொத்தம் 82 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 78 சாவடிகளில் சுங்கம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதமே 40 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 38 சுங்கச் சாவடிகளில் நாளை (செப்டம்பர் 1) முதல் உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு சாவடியிலும் வாகன வகைக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.20 வரை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கக்கட்டணம் 2008-ம் ஆண்டின் விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படுகிறது என்றாலும், இதில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. சாலை அமைப்பதற்கான முதலீடு எவ்வளவு? அதில் ஏற்கனவே எவ்வளவு திரும்பப்பெறப்பட்டது? என்ற விவரம் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. இதே நேரத்தில், சாலைகள் பராமரிக்கப்படாமை பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. பராமரிப்பு செய்யாத நிலையில் கட்டண உயர்வு செய்வது தார்மீக ரீதியில் பொருத்தமற்றது.
விதிப்படி 60 கிலோமீட்டருக்கு ஒரே ஒரு சுங்கச் சாவடி மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் 82 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. திமுக ஆட்சிக்கு வந்தபோது, மத்திய அரசுடன் பேசி 48 சுங்கச்சாவடிகளில் 32 மூடப்படும், 16 மட்டும் இருக்கும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக புதிய சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் கூட்டாக மக்களை ஏமாற்றுகின்றன.
மத்திய அரசு சுங்க வசூலில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டதாக கூறினாலும், அதே நேரத்தில் கட்டண உயர்வை நிறுத்தவில்லை. ரூ.3,000 செலுத்தினால் ஆண்டுக்கு 200 முறை சுங்கம் செலுத்தாமல் செல்லலாம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் மறுபுறம் கட்டணம் உயர்த்தப்படுவது முறையற்றது.
நெடுஞ்சாலை முதலீடு வட்டி சேர்த்து மீட்டெடுக்கப்பட்ட பிறகு சுங்க வசூலை நிறுத்த வேண்டும். ஆனால் மத்திய அரசு அதை பின்பற்றுவதில்லை. தொடர்ந்து வசூல் செய்வதால் இது நிரந்தர சுமையாக மாறி வருகிறது.
சுங்கக் கட்டண உயர்வு வாகன உரிமையாளர்களை மட்டுமே அல்லாது, பொதுமக்களையும் பாதிக்கும். வாடகை வாகனங்களின் கட்டணமும், சரக்குந்து கட்டணமும் உயரும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, மக்களின் நலனை கருத்தில் கொண்டு, நாளை (செப்டம்பர் 1) முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.