பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்குள் தேமுதிக சேருமா? – தொகுதி ஒதுக்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும், இதற்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக நடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்தது. அப்போது 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு, மாநிலங்களவை இடம் ஒன்றையும் வழங்குவதாக அதிமுக உறுதி அளித்தது. ஆனால் சமீபத்திய மாநிலங்களவைத் தேர்தலில் அந்த இடம் வழங்கப்படாததால் தேமுதிக அதிருப்தியடைந்தது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் இடம் வழங்குவோம் என்று அதிமுக அறிவித்தாலும், தேமுதிக அதில் மனம் வைக்கவில்லை. கட்சியின் கூட்டணி நிலைப்பாட்டை ஜனவரி மாத மாநாட்டில் அறிவிப்போம் என்று பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் திமுகவுடன் இணையும் ஆர்வம் தேமுதிக தரப்பில் அதிகரித்தது. மாநில அரசின் பல திட்டங்களை வரவேற்று அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், ஜூலை 31 அன்று பிரேமலதா, முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தது முக்கிய அரசியல் நிகழ்வாக அமைந்தது. அப்போது கூட்டணிக்கான விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகவும், ஸ்டாலின் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்றும் கூறப்பட்டது.

இப்போது திமுக-தேமுதிக கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் பரவியுள்ளது. மூத்த அமைச்சர் எ.வ.வேலு இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் திருச்சியில் நடந்த ஒரு திருமண விழாவில் அமைச்சர் கே.என்.நேரு, பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றியதும் இதற்கு வலுசேர்த்துள்ளது.

தேமுதிக நிர்வாகிகள் கூறுவதாவது:

“விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு பிரேமலதா கட்சியை வலுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். 2011 பேரவைத் தேர்தலுக்குப் பின் வெற்றியில்லாமல் போனதால், வரவிருக்கும் தேர்தல் எங்களுக்கு மிக முக்கியமானது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மரியாதை கிடைக்கவில்லை. வெற்றி வாய்ப்பு குறைந்த தொகுதிகள் மட்டுமே எங்களுக்கு ஒதுக்கப்பட்டன. மேலும், வாக்குறுதியளித்த மாநிலங்களவை இடமும் வழங்கப்படவில்லை. எனவே, திமுக கூட்டணியில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தது 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளும், மாநிலங்களவை இடமொன்றும் எங்கள் கோரிக்கையாகும். ஆனால் திமுக தரப்பில் தற்போது வெற்றி வாய்ப்புள்ள 7 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பேசப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படும் என நம்புகிறோம். மேலும், விஜயகாந்த் முன்னர் போட்டியிட்ட தொகுதியில் பிரேமலதாவை நிறுத்தும் திட்டமும் உள்ளது” என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே தேமுதிகவை அதிமுக, பாஜக கூட்டணிக்குள் வைத்திருக்க முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

Facebook Comments Box