குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த கழிவுநீர் – ஆவடியில் சாலை மறியலில் பொதுமக்கள்
ஆவடி அருகிலுள்ள கோயில்பாதாகை பகுதியில், கழிவுநீர் கலந்த மழைநீர் வீடுகளுக்குள் நுழைந்ததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள கோயில்பாதாகை முதல் கன்னடபாளையம் வரையிலான ஆவடி–வாணியன்சத்திரம் சாலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 22 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. ஆனால், அதே கால்வாயில் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வரும் கழிவுநீர் சேர்க்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் கால்வாய் உடைந்ததால், மழை பெய்யும் போதெல்லாம் கழிவுநீர் கலந்த மழைநீர் வெளியேறி, குடியிருப்பு பகுதிகளை சூழ்கிறது.
இதனால் எம்சிபி அவென்யு, கிருஷ்ணா அவென்யு, மங்களம் நகர், பாலாஜி நகர், பிளாட்டினம் சிட்டி, டிரினிட்டி அவென்யு போன்ற பகுதிகள் நீரில் மூழ்குவது வழக்கமாகி விட்டது. பொதுமக்கள் பலமுறை ஆவடி மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையிடம் புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மீண்டும் கழிவுநீர் கலந்த மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் கோபமடைந்த 200-க்கும் மேற்பட்டோர், கோயில்பாதாகை பகுதியில் ஆவடி–வாணியன்சத்திரம் சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்ததும், ஆவடி காவல் உதவி ஆணையர் கனகராஜ் மற்றும் டேங்க் பேக்டரி காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், “உடைந்த கால்வாய்களை சீரமைக்கும் நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்” என்று உறுதியளித்தனர். இதையடுத்து, ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.