சென்னை குடிநீர் ஏரிகளுக்கு மழைநீர் வரத்து அதிகரிப்பு

தென்னிந்தியாவில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்தினம் இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. மாவட்ட சராசரியாக 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

செங்குன்றம், தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் கனமழையும், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு ஆகிய இடங்களில் மிதமான மழையும், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பூண்டி, ஜமீன் கொரட்டூர் பகுதிகளில் லேசான மழையும் பெய்தது.

இந்த மழையால், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீர், சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேர்ந்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி –

  • புழல் ஏரிக்கு விநாடிக்கு 595 கன அடி
  • பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 360 கன அடி
  • செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 225 கன அடி
  • சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 30 கன அடி வரத்து பதிவாகியுள்ளது.

மேலும், பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக விநாடிக்கு 135 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 250 கன அடி, ஆந்திர மாநில கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 420 கன அடி நீர் வரும் நிலையில், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

அதன்படி,

  • புழல் ஏரியின் (3,300 mcft) கொள்ளளவில் 3,058 mcft நீர் உள்ளது.
  • பூண்டி ஏரியின் (3,231 mcft) கொள்ளளவில் 2,455 mcft உள்ளது.
  • செம்பரம்பாக்கம் ஏரியின் (3,645 mcft) கொள்ளளவில் 1,075 mcft உள்ளது.
  • சோழவரம் ஏரியின் (1,081 mcft) கொள்ளளவில் 172 mcft உள்ளது என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Facebook Comments Box