திமுக ஆட்சியில் தமிழகம் முன்னேற்றப் பாதையில்: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் உரை
திராவிட மாடல் ஆட்சி அமலுக்கு வந்த பின், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியில் மிக வேகமாக முன்னேற்றம் காணப்படுகிறது என ஜெர்மனியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
ஜெர்மனியின் கொலோன் நகரில் நடைபெற்ற தமிழ் கனவு – ஜெர்மனி வாழ் தமிழர் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர்,
“ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் வேறு நாட்டில் உங்களைச் சந்திக்கும் இன்பமே உண்மையான தமிழ்ப் பாசம்; தமிழின நேசம்.
உலகின் எந்த மூலையிலும் தமிழர் வாழ்கிறார்; தமிழின் குரல் கேட்கிறது. தங்கள் அறிவாலும் உழைப்பாலும் உயர்ந்திருக்கும் இனம்தான் நமது தமிழினம். அதுவே மிகப் பெரிய பெருமை,” என்றார்.
ஜெர்மனியில் வாழும் ஒவ்வொருவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி எனக் குறிப்பிட்ட அவர், “திராவிட இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டின் முதலமைச்சராக, நீங்கள் உயர் நிலைகளில் இருப்பதைப் பார்க்கும்போது பெருமை அடைகிறேன்,” என்றார்.
“திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய பின் தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. குறிப்பாக தொழில்துறை வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள்; சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள்; உறவினர்கள், நண்பர்களிடம் கேட்டிருப்பீர்கள்.
இந்த வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தவே வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் பயணங்களை மேற்கொண்டு வருகிறேன். ஏற்கனவே பல நாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்த்து, ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்,” என்று கூறினார்.
அயலகத் தமிழர்களின் நிலையைப் பார்ப்பது தான் வெளிநாட்டு பயணங்களில் முதலான விருப்பம் என்றும், அவர்கள் உயர்ந்த நிலையிலும் சுயமரியாதையுடனும் வாழ்வதைப் பார்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
“அயலகத் தமிழர் நாள் விழாவில் 62 நாடுகளில் இருந்து மக்கள் சென்னைக்கு வந்தனர். அயலகத் தமிழர்களுக்காக நாங்கள் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஹெல்ப்லைன், சுழல் நிதி, காப்பீடு, திடீர் உயிரிழப்பில் குடும்பத்திற்கு நிதியுதவி உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. வெளிநாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வந்துள்ளோம்.
மேலும், ‘வேர்களைத் தேடி’ திட்டம் மூலம் வெளிநாட்டு தமிழர்களின் பிள்ளைகள் தமிழ்நாட்டிற்கு அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் கண்களில் கலங்கிய கண்ணீரே இந்தத் திட்டத்தின் வெற்றியைக் காட்டுகிறது,” என தெரிவித்தார்.
“வாழ்வதும் வளர்வதும் தமிழோடு இணைந்தே இருக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். அதற்காகத்தான் தொடர்ந்து உழைக்கிறோம். நீங்கள் அனைவரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே சமயம், உங்களால் இயன்ற உதவிகளைத் தாய்நாட்டிற்குச் செய்ய வேண்டும்.
சிறு வியாபாரம் செய்தாலும், தமிழ்நாட்டிலும் தொடங்குங்கள். பெரிய நிறுவனங்களில் இருந்தால், முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு திருப்புங்கள். உங்கள் சொந்த ஊர்களை கவனியுங்கள். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள். ஆண்டுக்கு ஒருமுறை குழந்தைகளுடன் தமிழ்நாட்டிற்கு வாருங்கள். நமது வரலாறு, பண்பாடு, முன்னேற்றத்தை அவர்கள் பார்ப்பதற்கு வழிவகையுங்கள்.
நான் உங்களுக்காக தமிழ்நாட்டில் இருக்கிறேன்,” என முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.