யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட புதிய மனிதப் புதைகுழி – 200-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் வெளிச்சம்

இலங்கையின் உள்நாட்டு போர் வெகுவாக பாதித்த யாழ்ப்பாணம் மாவட்டம் செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில், மனிதப் புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் நடந்த அகழாய்வில் 200-க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அதிகமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் மூன்றரை தசாப்த காலம் நீடித்த உள்நாட்டு போரின் போது, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காணாமல் போனதாக பதிவுகள் உள்ளன. 1998ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த வழக்கின் விசாரணையின்போது, தண்டனை பெற்ற ஒரு ராணுவ வீரர், செம்மணி பகுதியில் மனிதப் புதைகுழி இருப்பதை முதன்முதலில் வெளிப்படுத்தினார். அப்போது நடந்த அகழாய்வில் 15 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் சில கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மாத்தளை, சூரியகந்த, வனவாசல், கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மனிதப் புதைகுழிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

சமீபத்தில், செம்மணி சிந்துப்பாத்தியில் மனிதப் புதைகுழி என கருதப்பட்ட இடத்தில், கடந்த ஜூன் மாதம் அகழாய்வு தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தில் சில எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் 31 வரை மூன்று கட்டங்களாக நடந்த அகழாய்வில் மொத்தம் 209 எலும்புக்கூடுகள் வெளிச்சம் கண்டுள்ளன. இதில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கணிசமான அளவில் இருந்தன. கூடுதலாக குழந்தைகளின் காலணிகள், விளையாட்டு பொருட்கள், புத்தகப் பைகள் போன்றவையும் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், செம்மணி பழைய மனிதப் புதைகுழி வழக்கையும், தற்போதைய சிந்துப்பாத்தி அகழாய்வு வழக்கையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க வழக்கறிஞர் குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Facebook Comments Box