“மோடியின் சீனப் பயணம் ஏற்றுக்கொள்ளக்கூடாதது” – கரூர் எம்.பி. ஜோதிமணி கடுமையான குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள சீன பயணம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. இந்தியாவின் பல எல்லைப்பகுதிகள் சீன ஆக்கிரமிப்பில் உள்ளன. மேலும் சீனாவின் ஒத்துழைப்புடன் பாகிஸ்தான் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளது என கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் 12வது புத்தகத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

அமெரிக்கா 50% சுங்க வரி விதித்திருப்பது இந்தியாவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உற்பத்தியாகும் ஆடைகளில் சுமார் 35% அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்கனவே மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் ரூபாய் மதிப்பிழப்பு தாக்கத்தில் இருந்து தொழில்துறை மீண்டு வரவில்லை. பிரதமரின் தவறான வெளிநாட்டு கொள்கைகளே இதற்குக் காரணம்.

அமெரிக்கத் தேர்தலில் மோடி, ட்ரம்ப்பிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது சர்வதேச அரசியலில் முறையல்ல. எந்த நாட்டின் தலைவரும் வேறு நாட்டின் தேர்தலில் நேரடியாக பிரச்சாரம் செய்யக் கூடாது.

இன்றைய சூழலில் 50% பெட்ரோலிய இறக்குமதியால் நன்மை பெறுவது பாஜக, அதானி மற்றும் பிரதமர் மட்டுமே; ஆனால் பாதிப்படைவது சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களே. சமீபத்தில் கடல் உணவுகள் கூட திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதன் விளைவாக வேலைவாய்ப்பு குறைவு மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் தடைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மத்திய அரசு தொழிலதிபர்களுடன் ஆலோசித்து தீர்வுகளை வகுக்க வேண்டும்.

மோடியின் சீனப் பயணம் முற்றிலும் தவறானது. சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் இந்தியாவை தாக்குகிறது. அத்தகைய நாட்டுடன் நட்பு காட்டுவதற்கு என்ன காரணம்? நாடாளுமன்றத்தில் கூட சீனாவைப் பற்றி பிரதமர் திறந்தவெளியில் ஒருமுறையும் பேசவில்லை. இது தேசிய நலனுக்கு விரோதமானது.

மேலும் பாஜக அரசு வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது. தேர்தலில் 30 நாட்கள் சிறைத் தண்டனை அடிப்படையில் பதவியை பறிக்கும் சட்டம் கருப்புச் சட்டம். யாரும் தவறு செய்தது நிரூபிக்கப்பட்ட பின் தான் தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது அமலாக்கத்துறை தமிழகத்திலேயே முகாம் போட்டுள்ளது போல செயல்படுகிறது.

தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய கல்வி நிதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்காக எம்.பி. சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். வரலாற்று ரீதியாக எந்த சர்வாதிகார ஆட்சியும் நீண்ட நாள் நிலைத்ததில்லை. விஜய், காங்கிரஸைக் குறை கூற எதுவும் இல்லை. சாதாரண மக்களின் வாக்கையே பாஜக திருடுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்ததில்லை.

காங்கிரஸ் இந்தியாவை வலுவான தேசமாக விட்டுச் சென்றது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸை விமர்சிக்க பிரதமருக்கு எந்தவித நியாயமும் இல்லை” என ஜோதிமணி வலியுறுத்தினார்.

பின்னர் அவர் மகளிர் சிறப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு மாணவிகளுடன் உரையாடினார்.

Facebook Comments Box