“தகுதியான டிஜிபியை நியமிக்கச் சொன்ன போதிலும் திமுக அரசு பின்பற்றவில்லை!” – மதுரையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

“மக்களின் பாதுகாப்பைக் கவனிக்க வேண்டிய காவல்துறையின் தலைமைப் பொறுப்பு டிஜிபி இடத்தை கூட சரியான நேரத்தில் நிரப்ப இயலாத அளவுக்கு திமுக அரசு சோம்பல் காட்டுகிறது. தகுதியான நபரை டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்று எத்தனை முறை வலியுறுத்தினாலும், அதைக் கேட்கத் தயங்கிவிட்டது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டினார்.

‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தின் நான்காவது கட்டம் இன்று துவங்கியது. அதன் முதல்நாள் நிகழ்ச்சியாக திருப்பரங்குன்றம் தொகுதியின் 16 கால் மண்டபம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:

“ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற இந்த மண்ணில் நான் பேசுகிறேன். அதிமுக ஆட்சியில், ஜல்லிக்கட்டு போட்டிகளை அதனுடன் சம்பந்தப்பட்ட அமைப்பினரே நடத்தினர். ஆனால், திமுக ஆட்சி வந்ததும் போட்டிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.

ஜல்லிக்கட்டு அனுமதி டோக்கன் விநியோகத்தில்கூட இந்த அரசு லஞ்சமும் ஊழலும்தான் செய்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், முன்புபோல சுதந்திரமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வழி செய்யப்படும். ஜல்லிக்கட்டு காளைக்கு சிலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளீர்கள்; அதிமுக அரசு அமைந்ததும் கண்டிப்பாக சிலை நிறுவப்படும்.

மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரி என எல்லா துறைகளிலும் மோசடி செய்துள்ளனர். இதை நாங்கள்தான் கூறவில்லை; அரசே நடத்திய விசாரணையிலேயே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேயரின் கணவரும் கைது செய்யப்பட்டார். மேயரின் பங்கு இல்லாமல் இத்தகைய ஊழல் சாத்தியமில்லை. எனவே, மேயரையும் கைது செய்ய வேண்டியது அவசியம். ஆனால் திமுக அரசு அவரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முழுமையாக விசாரித்து குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இது மதுரையிலேயே மட்டுமல்ல; மாநிலம் முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் பணப் பிரிப்பில் சண்டை ஏற்பட்டு, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார்கள். காஞ்சிபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூரிலும் இப்படியே நடந்துள்ளது. மற்ற நகர்ப்புற பகுதிகளிலும் ஊழல் பரவியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தும் விசாரிக்கப்படும்.

சட்டம் ஒழுங்கு டிஜிபி ஓய்வு பெற்றுவிட்டார். விதிமுறைப்படி, மூன்று மாதங்களுக்கு முன்பே புதிய டிஜிபிக்களின் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி, அங்கிருந்து மூவரைத் தேர்வு செய்து, அதிலிருந்து ஒருவரை மாநில அரசு நியமிக்க வேண்டும். ஆனால் இந்த சட்டத்தையே பின்பற்றாமல் திமுக அரசு கையாலாகாத நிலையில் உள்ளது. தகுதி வாய்ந்த எட்டு டிஜிபிகள் இருக்கையிலும், ஒன்பதாவது டிஜிபியை மட்டும் பொறுப்பு டிஜிபியாக நியமித்துள்ளனர்.

ஏற்கனவே சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்த நிலையில், சிறுமியிலிருந்து முதியவர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட சூழலில், டிஜிபி நியமனம் காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டும். ஓய்வு பெறும் நாள் அரசு முன்பே அறிந்திருந்தும், திட்டமிட்டு சட்டப்படி செயல் படாமல், விருப்பப்பட்டவரைத் தேர்வு செய்துள்ளது. இதனால், அந்த எட்டு டிஜிபிகள் பதவியேற்பு விழாவிலேயே கலந்துகொள்ள மறுத்தனர். பொறுப்பு வாய்ந்த எட்டு அதிகாரிகள் புறக்கணித்த நிகழ்ச்சியில் அரசு எப்படி இயங்கும்? காவல்துறையிலேயே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பை கவனிக்க வேண்டிய டிஜிபி நியமனத்தைச் செய்ய இயலாத அளவுக்கு திமுக அரசு தள்ளாடுகிறது.

முதல்வர் ஸ்டாலின் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். இந்த முறையாவது சைக்கிள் ஓட்டாமல் இருந்தால் போதும். அதிமுக ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை முதலீட்டாளர் மாநாடு நடத்தி, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, கோடிக்கணக்கான முதலீடுகள் வந்து, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால், திமுக அரசு நடத்திய மாநாட்டின் முடிவுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட போதிலும், இதுவரை தரவில்லை. தொழில்துறை அமைச்சர் பல ஒப்பந்தங்கள் ஏற்பட்டதாகச் சொல்கிறார்; அப்படியானால் வெள்ளை அறிக்கை ஏன் தரவில்லை?

அமைச்சர் ராஜா, “எடப்பாடி வெளிநாடு சென்று ஸ்பூனில் சாப்பிட்டதை பெருமை படுத்துகிறார்” என்கிறார். ஆம், நான் ஸ்பூனில் சாப்பிட்டதை பெருமையாகத்தான் நினைக்கிறேன். ஏனெனில் நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். உங்கள் அப்பா மத்திய மந்திரி; உங்கள் தலைவரின் அப்பா முதலமைச்சர். எனவே உங்களுக்கு தங்க ஸ்பூனும், வெள்ளித் தட்டும் கிடைக்கலாம். ஆனால் நான் மக்களோடு வாழ்ந்து வந்தவன்; கையால் சாப்பிடுதலே எனக்கு இயல்பானது.

மக்களுக்கு சாப்பாடே இல்லாமல் தடுமாறுகிறார்கள். அதற்காகத்தான் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. ஆனால், இதைச் சரியாக நடத்தாமல் ஊழியர்களைக் குறைத்து, பொருட்களையும் வழங்காமல், மக்கள் நலனைப் புறக்கணித்துவிட்டார்கள்.

2011க்கு முன்பான திமுக ஆட்சியையும், பின்னர் அதிமுக ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். இன்று போதைப்பொருள் எங்கும் கிடைக்கிறது. இளைஞர்கள் அதனால் சீரழிகிறார்கள். நான் பலமுறை எச்சரித்தும் முதல்வர் கவனிக்கவில்லை. இப்போது தான் மாநிலம் போதை மாநிலமாக மாறிவிட்டது. இளைஞர்கள் சீரழிந்த பிறகு தான் முதல்வரும், உதயநிதியும் விழித்துக்கொண்டனர்.

டாஸ்மாக்கில் தினமும் ஒன்றரை கோடி பாட்டில்கள் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதால், நாளொன்றுக்கு 15 கோடி, மாதத்திற்கு 450 கோடி, நான்கு ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் மேலிடம் சென்றுள்ளது. இதனை டாஸ்மாக் ஊழியர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். அதிமுக ஆட்சி வந்ததும் இதனை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்சார கட்டணம் 67% உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணமும் வசூலிக்கிறார்கள். அதற்குப் பிறகும் மின்சார வாரியம் கடனில்தான் தத்தளிக்கிறது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என அனைத்தும் 100 முதல் 150% உயர்த்தப்பட்டுள்ளன. குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுகதான்.

விலைவாசி அதிகரிப்பை கட்டுப்படுத்த திமுக அரசு எதுவும் செய்யவில்லை. ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியிலோ, விலை உயர்ந்தால் உடனே 100 கோடி நிதி ஒதுக்கி, அண்டை மாநிலங்களில் குறைந்த விலையில் பொருட்கள் வாங்கி கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்களுக்கு வழங்கியது. ஆனால், 51 மாதங்கள் ஆன திமுக ஆட்சியில் இதுபோன்ற எதுவும் செய்யவில்லை.

எங்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை அதிகரித்துவிட்டது. நான்கு ஆண்டுகள் தூங்கிவிட்டு தேர்தல் சமீபமாக வருவதால், இப்போது தான் மக்கள் பிரச்சினைகளை கவனிப்பதாக நடிக்கிறார்கள். மனுக்கள் பெறப்பட்டும் அவை ஆற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. இவ்வாறு மக்களை மதிக்காதவர்கள் ஆட்சி செய்யத் தகுதியானவர்களா?

அதிமுக ஆட்சியில் மாணவர்கள், தொழிலாளர்கள், ஏழை மக்கள் என அனைவருக்கும் நன்மைகள் வழங்கப்பட்டன. ரேஷனில் இலவச பொருட்கள், மாணவர்களுக்கு ஆல் பாஸ், ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா போல மக்கள் நலனில் செயல்பட்டது.

அடுத்த முறையும் அதிமுக ஆட்சி அமைந்ததும், ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள், பெண்களுக்கு தீபாவளியில் சேலை, 24 மணி நேர அரசு மருத்துவமனை, பள்ளி மேம்பாடு, பொறியியல் கல்லூரி, மருத்துவ ஆராய்ச்சி மையம், போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு, முல்லைப் பெரியாறு திட்ட முன்னேற்றம் போன்ற பல வேலைகள் மேற்கொள்ளப்படும்.

திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் வசதி, கிரிவலம் பாதை மேம்பாடு, பைபாஸ் பாலம், பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றை திமுக வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் இவை அனைத்தும் விரைவாக முடிக்கப்படும்.

இந்த பகுதியில் மல்லிகைப் பூ சாகுபடி அதிகம். சில சமயம் விலை சரிவு ஏற்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும், மல்லிகை சென்ட் தொழிற்சாலை அமைத்து விவசாயிகளுக்கு உதவியளிக்கப்படும்.

மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம். பை பை ஸ்டாலின்!” என பழனிசாமி உரையாற்றினார்.

Facebook Comments Box