மடப்புரம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறைபாடு, நீதிமன்றம் திருப்பி அனுப்பியது

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண் அளித்த நகை திருட்டு வழக்கில், தனிப்படை போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

பின்னர், அஜித்குமாரின் தாயார் உட்பட பலர், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். விசாரணை நடைபெற்றபோது, தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. அதன்படி, சிபிஐ விசாரணை முடித்து ஆகஸ்ட் 20க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, சிபிஐ விசாரணை நடத்தி, ஆகஸ்ட் 20 அன்று ஆன்லைன் வழியாக குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், தனிப்படை வாகன ஓட்டுநர் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்காக சிபிஐக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

ஆனால், அஜித்குமார் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் கட்ட குற்றப்பத்திரிகையில் சில குறைபாடுகள் உள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். எனவே, அந்த குறைகளை சரிசெய்து மீண்டும் தாக்கல் செய்யுமாறு, நீதிபதி செல்வபாண்டி சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்.

Facebook Comments Box