“நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்” – உதயநிதி உத்தரவு
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாம்களை அதிக எண்ணிக்கையில் நடத்த வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
சென்னையின் நந்தனத்தில் உள்ள திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கழகத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.
அதில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கல்லூரிக் கனவு திட்டம், பொறியியல் – கலை – அறிவியல் – பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் திறன் பயிற்சி, ஸ்கவுட் திட்டம், மாநில அளவிலான திறன் போட்டிகள், நிரல் திருவிழா (Hackathon), வேலைவாய்ப்பு திட்டம் (TNSLPP), உயர்வுக்குப்படி திட்டம், குடிமைப்பணித் தேர்வு, வங்கி பணியாளர் தேர்வு, எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான உறைவிடப் பயிற்சி உள்ளிட்ட முன்னெடுப்புகளின் தற்போதைய முன்னேற்றம் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து ஊக்குவிக்க வேண்டும். வரும் 2026 ஆம் ஆண்டில் சீனாவின் ஷாங்காயில் நடைபெறும் சர்வதேச திறன் போட்டிகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் உயர்தர தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். நிரல் திருவிழா 2.0 மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தொழில் முனைவோராக உருவாக்கப்பட வேண்டும்.
மேலும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரித்து, அதிகமான மாணவர்கள் வேலை பெறும் வழி ஏற்படுத்த வேண்டும். போட்டித் தேர்வுகள் பிரிவின் மூலம் அரசுப் பணிகளில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்த இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.
அதேபோல், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பை பெறும் வகையில், தகுந்த திறன் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலர் பிரதீப் யாதவ், திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் கிராந்தி குமார் பாடி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.