“முதல்வரின் முதலீட்டு பயணம் உண்மையில் மோசடி பயணம்!” – அன்புமணி ராமதாஸ்

“முதல்வரின் முதலீடு திரட்டும் வெளிநாட்டு சுற்றுப்பயணம், உண்மையில் ஒரு மோசடி பயணமே. திருவள்ளூரில் இயங்கிவரும் நிறுவனங்களிடம் முதலீடு பெறுவதற்காக ஜெர்மனி செல்ல வேண்டிய அவசியமென்ன?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“ஜெர்மனியில் விஜயம் மேற்கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அங்குள்ள மூன்று நிறுவனங்களுடன் சேர்ந்து ரூ.3201 கோடி முதலீடு பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

ஆனால், அந்த ஒப்பந்தம் செய்த நிறுவனங்களில் எதுவும் புதியதல்ல. அனைத்தும் ஏற்கனவே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களே. எனவே, முதலமைச்சரின் முதலீடு திரட்டும் பயணம் முற்றிலும் மோசடிப் பயணமாகவே இருப்பது, அவருடைய விஜயத்தின் முதல் நாளிலேயே வெளிப்படையாகி விட்டது.

உதாரணமாக –

  • ரூ.2000 கோடி முதலீடு செய்ய இருப்பதாகக் கூறப்படும் Knorr-Bremse நிறுவனம், ஏற்கனவே கிண்டி அருகே செயற்கை நுண்ணறிவு மையத்தைக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறது.
  • ரூ.1000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகக் கூறப்படும் Nordex குழுமத்தின் காற்றாலை உற்பத்தி நிறுவனம், சென்னைக்கு அருகில் பெரியபாளையம் அடுத்த வெங்கல் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
  • மூன்றாவதாக ரூ.201 கோடி முதலீடு செய்ய இருப்பதாகக் கூறப்படும் ebm-papst நிறுவனத்தின் உலக திறன் மையமும், ஏற்கனவே சென்னை தரமணியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதில் கடைசி இரண்டு முதலீடுகள் கூட, ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமைப்புகளின் விரிவாக்கத்திற்கானவைதான். எனவே, முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ள ரூ.3201 கோடி முதலீடும், இயல்பாகவே மாநிலத்துக்கு வந்திருக்கும் முதலீடே.

முதல்வர் விரும்பியிருந்தால், இந்த ஒப்பந்தங்களை அதிகாரிகளின் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்திலேயே கையெழுத்திட்டு முடித்திருக்கலாம். இதற்காக படை பரிவாரங்களுடன் ஜெர்மனி செல்வது, கொக்கை நேரடியாக பிடிக்காமல், அதன் தலையில் வெண்ணெய் தடவி, அது உருகி கண்களை மூடும்போது பிடிப்பதற்குச் சமமான செயலாகும்.

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள், மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதே தவிர, எந்தப் பயனையும் தரவில்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். ஜெர்மனி விஜயத்தையும் சேர்த்து பார்த்தால், இதுவரை வெளிநாடுகளில் கையெழுத்தாகியுள்ள முதலீட்டு ஒப்பந்தங்களின் மொத்தம் ரூ.21 ஆயிரம் கோடி மட்டுமே.

ஆனால், அரசு கூறுவது ரூ.10.65 லட்ச கோடி முதலீடு என. இதற்கு ஒப்பிடும் போது வெளிநாட்டு பயணங்களில் பெற்றது வெறும் 2% தான். மீதமுள்ள 98% முதலீடுகளை சென்னை தலைமைச் செயலகத்திலேயே அதிகாரிகள் முயற்சியால் பெற்றிருக்க முடிந்தது.

அப்படியிருக்க, வெறும் 2% முதலீட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடலை சிரமப்படுத்திக் கொண்டு, மக்கள் பணத்தை வீணாக்கி வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டிய தேவை என்ன? என்பதை தமிழக மக்களுக்கு முதல்வர் விளக்க வேண்டும்,” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Facebook Comments Box