கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் பழங்குடியினர் நலத்துறை – 1,000 குடும்பங்களுக்கு புதிய வாழ்வாதார நம்பிக்கை

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில், பழங்குடியினர் நலத்துறை – தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (டானுவாஸ்) இணைந்து – ஐந்திணை: தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு சார்ந்த முன்னோடித் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

பெண்களை மையமாகக் கொண்ட திட்டம்

இந்தத் திட்டம், சுமார் 1,000 பழங்குடியினர் குடும்பங்களை இலக்காகக் கொண்டு, குறிப்பாக பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் சமூகத்தில் காணப்படும் கந்துவட்டி கடன் பிரச்சினைகள் குறைய, குடும்பங்கள் நேரடியாக வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், அவர்கள் வங்கிக் கடன்கள் பெறுவதும், அதனை உற்பத்தி சார்ந்த செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதும் சாத்தியமாகியுள்ளது.

உதாரணமாக, திருவள்ளூரில் பல சுயஉதவிக் குழுப் பெண்கள் வங்கிக் கடன் பெற்று, ஆடு கொட்டகைகள் அமைத்தல், தீவனம் வாங்குதல் போன்ற தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர்.

நிதியுதவி மற்றும் முன்னேற்றம்

மொத்தம் ரூ.13 லட்சம் கடன் 33 பெண்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் பழைய கடன்களை அடைத்ததுடன், புதிய தொழில்களில் முதலீடு செய்யும் நிலையை அடைந்துள்ளனர்.

மேலும், அறிவியல் முறையிலான பயிற்சிகள், கால்நடை மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதன் மூலம், ஆடுகள் மற்றும் கோழிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதனால், பல குடும்பங்களின் நிலையான வருவாய் உருவாகத் தொடங்கியுள்ளது.

சாதாரணமாக தினக்கூலி வேலைகளையே நம்பியிருந்த பெண்கள், தற்போது முட்டை, ஆட்டுக்குட்டி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்து மாதம் ரூ.32,000 வரை வருவாய் ஈட்டும் நிலையை அடைந்துள்ளனர்.

பயிற்சி மற்றும் லாபகரமான தொழில்

குடும்பங்களுக்கு கால்நடை மட்டுமின்றி, அவற்றின் பராமரிப்பு, நோய்த் தடுப்பு, இனப்பெருக்கம் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டன. தொடர்ச்சியான பயிற்சிகளின் மூலம், கால்நடை வளர்ப்பு லாபகரமான தொழிலாக மாறி வருகிறது.

பழங்குடியினர் நலத்துறையின் செயலாளர் கூறுகையில்:

“நிலமற்ற பழங்குடியினரும், சமூகத்தின் விளிம்புநிலையிலும் வாழ்பவர்களும், இந்தத் திட்டத்தின் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளனர். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதால், குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்பும் கிடைக்கிறது” என்றார்.

பயனடைந்தவர்களின் அனுபவங்கள்

  • துர்கா (பொன்னேரி) :

    “எனக்கு மூன்று பெண் ஆடுகளும், ஒரு ஆண் ஆடும் வழங்கப்பட்டது. இப்போது அந்த ஆடுகள் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளன. முன்னர் வாழ்க்கையில் வழியில்லாமல் திணறிய நான், இத்திட்டத்தின் மூலம் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளேன். எங்கள் வாழ்க்கையை முன்னேற்றிய இந்த முயற்சிக்காக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு என் மனமார்ந்த நன்றி. எதிர்காலத்தில் ஒரு பெரிய பண்ணை அமைப்பதே என் கனவு.”

  • முருகம்மாள் (பழவேற்காடு) :

    “என் கணவருக்கு வேலை இல்லாததால் நாங்கள் கடுமையான வறுமையில் சிக்கித் தவித்தோம். இத்திட்டத்தின் மூலம் ஆடு மற்றும் கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி பெற்றேன். தற்போது 50 நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறேன். ஒவ்வொரு கோழியும் ரூ.500 வரை விற்பனையாகிறது. இதனால், எங்கள் குடும்பத்திற்கு கணிசமான மாதாந்திர வருமானம் கிடைக்கிறது.”

Facebook Comments Box