‘குஜராத் நிறுவனங்களுக்கு லாபம்…’ – அமெரிக்க வரி விவகாரம் குறித்து மோடிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் விமர்சனம்

“குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் கிடைக்க ஏற்பாடு செய்து, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எங்கள் ஏற்றுமதியாளர்களை சிரமத்தில் தள்ளுவது எப்படி நியாயமாகும்?” என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க அரசு 50 சதவீத வரி விதித்ததன் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களை புறக்கணித்ததாக மத்திய பாஜக ஆட்சியை எதிர்த்து, திமுக கூட்டணி சார்பில் இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தது!” என்று குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

“பிரதமர் மோடி அவர்களே, தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் அரசு அமெரிக்காவில் விதித்துள்ள வரி காரணமாக, தமிழக இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரமாய் விளங்கும் ‘டாலர் சிட்டி’ திருப்பூர் சிரமங்களை எதிர்கொள்கிறது.

குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சலுகையுடன் ரஷ்ய கச்சா எண்ணெய் வழங்கப்படும் நிலையில், ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எங்கள் ஏற்றுமதி நிறுவனங்களைப் புறக்கணிப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. நான் ஏற்கெனவே கடிதம் மூலம் கோரிய நிவாரணங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள்; அதுவே ‘விஸ்வகுரு’ என்ற பட்டத்துக்கு நியாயம் செய்யும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி!” என்று கூறியுள்ளார். மேலும், இந்தப் பதிவை ஸ்டாலின், பிரதமர் மோடியையும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் டேக் செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி, நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் நடவடிக்கையாகும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் இல்லாமல், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகும்.

திருப்பூர், கோவை, கரூர் போன்ற மாவட்டங்களில் பின்னலாடைத் தொழில், வேளாண்மை மற்றும் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு அனுப்பிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

அதேபோல், விசிக தலைவர் திருமாவளவன், “அதானி, அம்பானி போன்றோருக்காகவே பிரதமர் மோடி பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கிறார். வெளிநாட்டு பயணங்களும் அவர்களுக்காகத்தான்” எனக் குற்றம் சாட்டினார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, “மன்மோகன் சிங் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை 108 டாலராக இருந்தபோதும், பெட்ரோல் விலை குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்துள்ளது. மோடி, அமித் ஷா ஆகியோர் இந்தியாவை விற்று, அம்பானி-அதானி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தேசபக்தி உள்ளவராக இருந்தால், வரிக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். அதேசமயம் சிறப்பு சலுகைகள் அடங்கிய திட்டத்தையும் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வரலாறு மோடியை மன்னிக்காது” என்று தெரிவித்தார்.

திருப்பூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி, காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, எம்.பிக்கள் கே.சுப்பராயன், சு.வெங்கடேசன், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, ஆதித்தமிழர் பேரவை தலைவர் இரா.அதியமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Facebook Comments Box