ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.3,819 கோடிக்கு 23 ஒப்பந்தங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
ஜெர்மனியில் நடைபெற்ற “டி.என். ரைசிங் ஜெர்மனி” முதலீட்டாளர் மாநாட்டில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் தமிழகத்தில் 9,070 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தில் இருக்கிறார். இந்த பயணத்தின் போது ஜெர்மனியில் மட்டும் மொத்தம் 26 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.7,020 கோடியாகும். இதன் மூலம் 15,320 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டில் வென்சிஸ் எனர்ஜி (₹1,068 கோடி), பிஏஎஸ்எஃப் (₹300 கோடி), பெல்லா பிரீமியர் ஹேப்பி ஹைஜீன் (₹300 கோடி), ஹெர் ரென்க்னெக்ட் இந்தியா (₹250 கோடி), பல்ஸ் (₹200 கோடி), விட்சென்மேன் இந்தியா (₹200 கோடி), மாஷ் எனர்ஜி (₹200 கோடி) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்தன.
மேலும், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் நடந்த சந்திப்பில், தமிழகத்தில் ஆட்டோமொபைல் மற்றும் மின்சார வாகன உற்பத்தியை விரிவுபடுத்துமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், ஜெர்மனியின் இரட்டை தொழில் பயிற்சி முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்த நெக்ஸ்ட் மிட்டல்ஸ்டாண்ட் (ஆஸ் பில்டங்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 120 மாணவர்களுடன் தொடங்கும் இந்த திட்டம், பத்து ஆண்டுகளில் 20,000 மாணவர்களுக்கு விரிவடையும்.
பின்னர், இங்கிலாந்து சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்குள்ள முதலீட்டாளர்கள் மற்றும் தமிழ்ச் சமூகத்தை சந்தித்தார். இந்நிகழ்வுகளில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் தொழில் துறைச் செயலர் வி.அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் ஸ்டாலின் உரை:
“இந்தியாவில் தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி அடையும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ளோம். 48% நகர்மயமாக்கலுடன், அதிகமான தொழிற்சாலைகளும், திறமையான பணியாளர்களும் கொண்ட மாநிலமாக திகழ்கிறோம்.
ஜெர்மனி உலகின் தொழில்துறை இதயமாக இருந்தால், அதேபோல் இந்தியாவில் தொழில்துறையின் மையமாக தமிழ்நாடு விளங்குகிறது. சைக்கிள் முதல் டாங்குகள் வரை தயாரிக்கும் திறன் நமக்குள்ளது. உலகம் ‘மேட் இன் ஜெர்மனி’ என்பதைக் கண்டு தரத்தை உணர்ந்தால், அதேபோல் ‘மேட் இன் தமிழ்நாடு’ என்பதும் தரத்தின் அடையாளமாக மாறிக் கொண்டிருக்கிறது.
ஜெர்மனி – தமிழ்நாடு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பால், தொழில்துறையில் புதிய உயரங்களை அடையலாம். தொழில்நுட்ப துல்லியத்தில் ஜெர்மனியும், திறமையில் தமிழ்நாடும் இணைந்தால், ஆசியா – ஐரோப்பாவுக்கிடையே வலுவான வர்த்தக பாலம் உருவாகும்.
முதலீட்டாளர்கள் அனைவருக்கும் தமிழக அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது. எனவே, உங்கள் முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா சந்திப்பு
ஜெர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தின் முதலமைச்சர் ஹென்ட்ரிக் வுஸ்ட் உடன் ஸ்டாலின் சந்தித்து பேசியார். மின்சார இயக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில் 4.0, மேம்பட்ட உற்பத்தி, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பினரும் ஒத்துழைக்க ஒப்பந்தம் செய்தனர்.
மேலும், ஜெர்மனியில் உள்ள திறமையான மனிதவளத்தில், தமிழக இளைஞர்கள் பங்கெடுக்க வழி செய்யும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனிடையே, ஜெர்மன் அமைச்சர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் தமிழகம் வருமாறு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.