செப்.6 வரை தமிழகத்தில் வெப்பநிலை உயர வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வரும் செப்டம்பர் 6-ம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து செப்டம்பர் 4-ம் தேதி ஒடிசா பகுதியை கடந்து செல்லக்கூடும்.

இதே நேரத்தில், மேற்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் பலத்த தரைக்காற்று மணிக்கு 40–50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் செப்டம்பர் 6 வரை அதிகபட்ச வெப்பநிலை 35.6 முதல் 37.4 டிகிரி பாரன்ஹீட்டை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 93.2–95 டிகிரி பாரன்ஹீட்டுக்கும், குறைந்தபட்ச வெப்பநிலை 80.6–82.4 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் இடையில் பதிவாகும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

செப்.3 மற்றும் 4 தேதிகளில் தென் மற்றும் வட தமிழக கடலோரங்கள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென் மற்றும் வடமேற்கு வங்கக்கடல், அந்தமான், அரபிக்கடல் பகுதிகள், குஜராத், ஒரிஸா, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, கோவா, கொங்கன், லட்சதீவு, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 கிமீ வரை வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை பதிவுகள்:

கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 8.30 மணி வரை, நாமக்கல்லில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box