டெட் தேர்வு விவகாரம்: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது – அமைச்சர் அன்பில் மகேஸ்
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான பிரச்னையில், தமிழக அரசு எந்த நிலையிலும் ஆசிரியர்களை கைவிடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதியளித்தார்.
தமிழகத்தில் சமீபத்தில் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் திருச்சி கே.கே.நகர அரசு உயர்நிலைப் பள்ளியிலும் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வகுப்புகளைத் தொடங்கி வைத்து, புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகம், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் ஊடகங்களுக்கு பேசிய அவர் கூறியதாவது:
“தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்கள், TET தேர்வை கட்டாயம் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த தீர்ப்பின் முழு விவரம் கிடைத்தவுடன், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து மேல்முறையீடு செய்வோம்.
அதேபோல் ஆசிரியர் சங்கங்களும் தனித்தனியாக மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், எந்த சூழலிலும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறோம்,” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் மு.மதிவாணன், பள்ளித் தலைமை ஆசிரியை எலிசபெத் ராணி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.