மாணவர்களிடம் மசாஜ் செய்த தலைமை ஆசிரியர்: வீடியோ பரபரப்பு – இடமாற்ற உத்தரவு
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பள்ளியில், தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவர்கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் உடனடியாக வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் கலைவாணி உட்பட இரு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே, தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவர்கள் அழுத்தி மசாஜ் செய்யும் காட்சி பதிவாகி, அது இணையத்தில் வைரலானது. இதனால் கோபமடைந்த பெற்றோர், நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து, பள்ளியை முற்றுகையிட்டனர்.
பிரச்னை குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயகுமார், வட்டாட்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் சத்யபிரியா ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களும் ஆசிரியர்களும் சந்தித்து விசாரணை நடத்தினர்.
பெருமளவு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோர், “பலமுறை குழந்தைகளிடம் கை, கால் அழுத்தச்சொல்லி, இதை பெற்றோரிடம் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார். மாணவர்களிடம் தவறான முறையில் நடந்துகொண்ட தலைமை ஆசிரியருக்கு கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
கல்வித்துறை அதிகாரிகள், “விசாரணை முடிவின் பேரில், மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் படி தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய ஆசிரியர் உடனடியாக பொறுப்பேற்க உள்ளார்” என்று தெரிவித்தனர்.