தொழில்நுட்பப் பிழை: திருச்சி–சார்ஜா விமானம் ரத்து; பயணிகள் அவதி

திருச்சி–சார்ஜா விமானப் பயணம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் 176 பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை 4:45 மணிக்கு 176 பயணிகளுடன் புறப்பட்டது.

ஓடுதளத்தில் விமானத்தைச் சரிபார்க்கும்போது, தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பயணம் ரத்து செய்யப்பட, விமானத்தை மீண்டும் நிறுத்துமிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விமானத்தில் அமர வைக்கப்பட்டனர்.

இதனால் விமானத்தில் இருந்த குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட பயணிகள் பெரும் அவதியடைந்தனர். பலர் விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிறகு, அனைத்து பயணிகளையும் ஓய்வறைக்கு அழைத்து சென்று, அவர்களுக்கு டீ, காபி மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.

அதேவேளையில், விமானத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கோளாறு உடனடியாக சரி செய்ய முடியாததால், விமான நிறுவனத்தினர் மாற்று விமானம் மூலம் பயணிகளை சார்ஜாவுக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments Box