108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு: டிஜிபிக்கு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு உயர் நீதிமன்றம் டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மனுவை தாக்கல் செய்தவர்: மதுரையைச் சேர்ந்த 108 அவசர ஊர்தி ஓட்டுநர் இருளாண்டி. அவர் மனுவில் கூறியதாவது: “நான் கடந்த 16 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 18.08.2025 அன்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ‘மக்களை காப்போம்’ பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இரவு 9.45 மணியளவில் நான் அடுக்கம்பாறை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சந்திரா என்ற நோயாளியை அழைத்து கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்றேன்.

அப்போது எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்ஸை பார்த்து, இனிமேல் நோயாளி இல்லாமல் வந்தால், ஓட்டுநர் அதே வாகனத்தில் நோயாளியாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என மிரட்டினார். இதற்கான புகார் போலீசில் அளிக்கப்பட்டாலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.”

மேலும் மனுவில் குறிப்பிடப்பட்டதாவது: 24.08.2025 அன்று திருச்சி அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில், மயங்கி விழுந்த ஒருவரை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்த போது, அங்கு இருந்த அதிமுக உறுப்பினர்கள் ஓட்டுநரை தாக்கி ஆம்புலன்ஸை சேதப்படுத்தினர். பாதிக்கப்பட்ட ஓட்டுநர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் 108 ஊழியர்கள் மற்றும் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், குறைந்தது சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை இந்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் அமர்வில் மனுவை விசாரித்தனர். அரசு தரப்பில், திருச்சியில் ஓட்டுநரை தாக்கிய சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள், ஆம்புலன்ஸ் வாகனத்தை தாக்கியவர் யாராக இருந்தாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மனு தொடர்பாக டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப். 12-க்கு தள்ளிவைத்தனர்.

Facebook Comments Box