பிளஸ்–2 தேர்வுக்கான புதிய மையங்கள் – பரிந்துரைகள் சமர்ப்பிக்க செப்டம்பர் 15 வரை அவகாசம்

2025–26 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ்–2 பொதுத் தேர்வில் புதிய தேர்வு மையங்கள் அமைப்பதற்கான பரிந்துரைகளை செப்டம்பர் 15க்குள் அனுப்ப வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் க. சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், புதிய தேர்வு மையங்கள் அமைப்பதற்கான தேவையுள்ள பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்து, அதன் அவசியத்தை விளக்கி பரிந்துரை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு பரிந்துரைக்கப்படும் மையங்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்றும், அரசின் விதிகளுக்கு உட்படாத பள்ளிகளில் தேர்வு மையங்களை அமைக்க பரிந்துரை செய்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்து தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ள மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில், புதிய தேர்வு மையங்களை ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், அரசின் அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள் தேர்வு மையமாகச் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே, புதிய தேர்வு மையங்களுக்கு தொடர்பான பரிந்துரைகள் அனைத்தும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, செப்டம்பர் 15க்குள் தேர்வுத்துறை அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box