கச்சத்தீவில் சுற்றுலா திட்டம் அமல்படுத்த ஆய்வு – இலங்கை அரசு தகவல்

கச்சத்தீவுக்கு விரைவில் சுற்றுலா திட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 1ஆம் தேதி யாழ்ப்பாணம் மண்டைதீவில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழாவைத் தொடங்கி வைத்த பிறகு, இலங்கை அதிபர் அநுர குமார திசா நாயக்க அன்றைய மாலை கச்சத்தீவையும் பார்வையிட்டார்.

இந்த நிலையில், அதிபரின் பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்,

“கச்சத்தீவில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பு, அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கடற்படையினருடன் ஆலோசனை நடத்தினோம்.

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணத்திலிருந்து நெடுந்தீவுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அந்த சேவையை கச்சத்தீவு வரை நீட்டிப்பதற்கான யோசனை உள்ளது.

அதன் அடிப்படையில் நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை இணைக்கும் சுற்றுலா திட்டம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது,” என்று தெரிவித்தார்.

Facebook Comments Box