விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம்: ரூ.1,964 கோடிக்கு அரசாணை
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்கும் திட்டத்திற்காக, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய பணிகளுக்காக ரூ.1,963.63 கோடி செலவீனத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
தற்போது சென்னையில் 2 வழித்தடங்களில் சுமார் 54 கிலோமீட்டர் நீளத்தில் மெட்ரோ சேவைகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, 15.5 கி.மீ. நீளத்தில் விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ பாதை அமைக்க திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நீண்டகாலமாக இத்திட்டம் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் இருந்தது.
இதேவேளை, 2-ம் கட்ட மெட்ரோ திட்டம் சுமார் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 3 வழித்தடங்களில் 2 பாதைகளுக்கான விரிவாக்க அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்ததால், விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ பாதை அவசியம் என்ற கோரிக்கை அதிகரித்தது. அதன் அடிப்படையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாநில அரசிடம் அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.9,445 கோடியாக மதிப்பிடப்பட்டு, 13 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசு இதற்கு ஒப்புதல் அளித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.
இந்நிலையில், திட்டத்தை முன்னெடுப்பதற்கான முதல்கட்டமாக நிலம் கையகப்படுத்துதல், சாலை பணி, புவி தொழில்நுட்ப ஆய்வு, நிலப்பரப்பு சோதனை, தடுப்பணைகள் அமைத்தல், மரம் வெட்டுதல் மற்றும் மறுநடவு, குடிமைப் பணிகள் உள்ளிட்ட வேலைகளுக்காக ரூ.1,963.63 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.