பாஜக கூட்டணியில் இருந்து அமமுக விலகல் – டிடிவி தினகரன் அறிவிப்பு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக–பாஜக இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் என சிலர் கூறியிருந்த சூழ்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இருந்த அமமுக, தற்போது அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே புதன்கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது:
“2024 மக்களவைத் தேர்தலின் போது, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம். ஆனால் 2026-ல் நடைபெறவிருக்கும் தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது. இந்தத் தேர்தலில் அம்மாவின் தொண்டர்கள் ஒருங்கிணைந்து, சரியான முதல்வர் வேட்பாளரைத் தருவார்கள் என்று நாங்கள் காத்திருந்தோம்.
எந்த ஒருவருக்கும் அஞ்சாமல், யாருடைய சைகைக்காகவும் காத்திருக்காமல் நாங்கள் செயல்பட்டு வந்தோம். ஆனால், தொண்டர்கள் எதிர்பார்த்ததைப் போல நடந்தேறவில்லை. துரோகம் செய்து கொண்டு ஊர் ஊராகச் சுற்றுவதை பார்த்தபோது, திருந்த வாய்ப்பே இல்லையென்பது தெளிவாகியது.
நாங்கள் இதுவரை அமைதியாக இருந்தோம். ஆனால், துரோகம் செய்வதே சரி எனக் காட்டும் நிலைமை உருவாகி விட்டது. ஆணவம், அகங்காரம் நிறைந்த செயல்பாடுகள் தொடர்ந்ததால், எங்கள் தொண்டர்கள் பல மாதங்களாகவே ‘போதும், இனி முடிவு எடுங்கள்’ என்று கேட்டனர். உணர்ச்சிவசப்படாமல், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசித்து, நிதானமாக யோசித்த பிறகே இந்த முடிவை எடுத்தோம்.
இந்த இயக்கம் சிலரின் துரோகத்துக்கு எதிராகவே தோன்றியது. அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதை புரிந்துகொண்டோம். எனவே, இனி நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிக்கிறோம். எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிசம்பரில் முடிவு எடுக்கப்படும்” என்றார்.
ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகியிருந்தார். தற்போது அமமுகவும் விலகியுள்ளது. மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக அந்தக் கட்சி பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தொடருமா என்பது தெளிவாகவில்லை. அதே நிலைமைதான் தேமுதிக கட்சியிலும் காணப்படுகிறது.