“அமைச்சர் பிடிஆர் கூறிய ரூ.30,000 கோடி குற்றச்சாட்டு விசாரிக்கப்படும்” – மதுரையில் எடப்பாடி பழனிசாமி உறுதி

“அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படையாக கூறிய ரூ.30 ஆயிரம் கோடி குற்றச்சாட்டை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விசாரணை நடத்தி, உண்மை நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை மத்திய தொகுதியின் டி.எம். கோர்ட் மற்றும் தெற்கு தொகுதியின் ஓபுளாபடித்துறை பகுதிகளில் நடைபெற்ற ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ எழுச்சி பயண பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:

“முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசனும், துணை முதல்வர் உதயநிதியும் இரண்டு ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சேகரித்துள்ளனர். அந்தப் பணத்தை எப்படிச் செலவிடுவது எனத் தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனே அப்போது கூறினார்.

இது குறித்து இன்றுவரை முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்கவில்லை. ஒரு அமைச்சரின் வாயிலேயே வந்த குற்றச்சாட்டை வெறுமனே தவிர்க்க முடியாது. அதிமுக ஆட்சியில் இது குறித்து முழுமையான விசாரணை நடைபெறும்; முறைகேடுகள் உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் போதைப் பொருள் பரவலை நிறுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த டிஜிபி சங்கர் ஜிவால், ‘ஓ’ போட்டுக் கொண்டு ஓய்வு பெற்றுச் சென்றார். காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் ஆறு காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். திமுக அரசு செயலற்ற நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

அதிமுக சாதி, மத அரசியலை தாண்டிய கட்சி. எங்கள் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு உறுதியாகப் பாதுகாக்கப்பட்டது. ஆனால், அதிமுக–பாஜக கூட்டணி சிறுபான்மையினருக்கு எதிரானது எனும் தவறான படத்தை திமுக திட்டமிட்டு பரப்புகிறது. உண்மையில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பளித்தது அதிமுகதான். திமுகவின் இந்த அவப்பிரச்சாரத்தை மக்கள் நம்பக்கூடாது.

திமுக சமூக நீதியைப் பாதுகாக்கும் கட்சி என்று கூறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் திண்டிவனத்தில் பட்டியலின அதிகாரியை ஒரு பெண் கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த அவமானகரமான சம்பவம் நடந்துள்ளது. இப்படி செயல்படும் திமுக அரசே சமூக நீதியைப் பாதுகாக்கப் போகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

அந்தக் கூட்டத்துக்கு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் கே. ராஜூ தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமைப்புச் செயலாளர் ராஜன்செல்லப்பா, தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் ராஜ்சத்யன், மருத்துவர் அணி இணைச் செயலாளர் பா. சரவணன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பழனிசாமி தொடர்ந்து பேசியதாவது:

“மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இதைப் பற்றிச் சொன்னால், ‘திமுக கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள்’ என்று விடுதலைச் சிறுத்தை தலைவர்கள் குற்றம் சாட்டுவார்கள். ஆனால் உண்மையில் திமுகதான் அந்தக் கட்சியை மெல்ல மெல்ல விழுங்கி வருகிறது.

மதுரை தொகுதியின் எம்.பி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். மாநகராட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.200 கோடி ஊழல் குறித்து அவர் இதுவரை வாய் திறக்கவில்லை. அடுத்த தேர்தலில் கூட்டணியில் இடம் கிடைக்காது என்பதற்காகவே அமைதியாக இருக்கிறார். இப்படிப்பட்டவர் எம்.பி ஆகத் தகுதியானவரா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். திட்டங்களுக்கு பெயர் வைப்பதில் அவர் காட்டும் ஆர்வத்திற்காக அவருக்கு ‘நோபல் பரிசு’ கொடுக்கலாம். ஆனால், மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குப்பையாக வீசப்படுகின்றன. மனு அளிக்க வந்த முதியவரை கிராம நிர்வாக அதிகாரி தாக்கிய சம்பவமே நடந்துள்ளது. இப்படி மக்களை ஏமாற்றும் திமுகவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும்” என்றார்.

Facebook Comments Box