மீலாது நபி, தொடர் விடுமுறையையொட்டி 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மீலாது நபி மற்றும் தொடர்ச்சியான விடுமுறைகளை முன்னிட்டு மொத்தம் 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

செப்டம்பர் 4ஆம் தேதி சுப முகூர்த்த நாள், 5ஆம் தேதி மீலாது நபி, 6 மற்றும் 7ஆம் தேதிகள் வார இறுதி விடுமுறை என்பதால், அதிக அளவில் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, சென்னையின் கிளாம்பாக்கம் நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு செப்டம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் 1,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோல், மாதவரம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து கூடுதலாக 130 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களிலிருந்தும் பல்வேறு ஊர்களுக்கு 350 பேருந்துகள் இயக்கப்படும்.

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் செப்டம்பர் 7ஆம் தேதி சென்னை திரும்புவதற்காக 875 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனால், மொத்தத்தில் 2,470 சிறப்பு பேருந்துகள் இந்நாட்களில் இயக்கப்படும்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய நகரங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். சிறப்பு பேருந்து சேவையை கண்காணிக்க அனைத்து நிலையங்களிலும் தேவையான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வார இறுதியில் பயணிக்க 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box