ஜெர்மனி பயணத்தை முடித்து லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்களின் உற்சாக வரவேற்பு

ஜெர்மனியில் பயணத்தை நிறைவு செய்த பிறகு, இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்குள்ள தமிழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.

தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கு ஒரு வார காலம் வெளிநாட்டு பயணமாகச் சென்றிருந்தார். கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஜெர்மனிக்குப் புறப்பட்ட அவர், மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் பல்வேறு அதிகாரிகளுடன் பயணித்தார். அங்கு சென்றடைந்தவுடன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தூதரக அதிகாரிகள் மற்றும் அங்குள்ள தமிழர்கள் அவரை அன்புடன் வரவேற்றனர். மேலும், ஜெர்மனியில் வசிக்கும் தமிழ் மக்களை தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

அதேபோல், ‘TN Rising Germany’ என்ற பெயரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்றார். அந்த மாநாட்டின் மூலம் ரூ.7,020 கோடி மதிப்பில் மொத்தம் 26 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர், செப்டம்பர் 2ஆம் தேதி அவர் ஜெர்மனி பயணத்தை நிறைவு செய்து இங்கிலாந்து சென்றடைந்தார். லண்டன் விமான நிலையத்தில் இறங்கிய அவருக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பின், முதலமைச்சர் ஸ்டாலின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கிறார். இதற்கிடையில், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயண அனுபவங்கள் குறித்துப் தனது சமூக வலைதளப் பதிவுகளில் அவர் தெரிவித்துள்ளார்.

முதல் பதிவில், “தமிழகத்தின் முன்னேற்றப் பயணத்திற்கு இந்த ஐரோப்பிய சுற்றுப்பயணம் உறுதுணையாக இருக்கும். ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த அன்பும், கிடைத்த முதலீட்டு ஒப்பந்தங்களும் என்னை ஊக்குவித்துள்ளது. அந்த ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்துள்ளேன். இந்த அனுபவங்களை என் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், “இங்கிலாந்தில் காலடி வைத்துள்ளேன். வெளிநாட்டில் இருந்தும், எனக்கு வீட்டிலேயே இருப்பது போன்ற உணர்வு அளித்தது அங்குள்ளவர்களின் அன்பும், பாசமும்தான். அனைவரும் அன்போடு அரவணைத்தனர்” என தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box