மேயர்கள் மாற்றத்துக்கு காரணம் ஊழல் பணப் பங்கீடு சண்டை: பழனிசாமி குற்றச்சாட்டு
கோவை, காஞ்சிபுரம், நெல்லை மாநகராட்சி மேயர்கள், ஊழல் பணத்தைப் பங்கிடுவதில் கவுன்சிலர்களுக்குள் ஏற்பட்ட தகராறினால் மாற்றப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பிரச்சாரப்பயணத்தின் மூன்றாவது நாளில், மதுரை மேற்கு தொகுதியில் உள்ள பழங்காநத்தத்தில் பேசிய அவர் கூறியதாவது:
“மதுரை மாவட்டம் அதிமுகவின் பலமான கோட்டை. கடந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து சில இடங்களில் திமுக வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
இன்றைய திமுக ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது. போதைப்பொருள் பரவல் மாநிலத்தை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. ஊழல் இல்லாத துறை ஒன்றும் இல்லை. மதுரை மாநகராட்சியில் மட்டும் சொத்துவரியில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளது. அதற்குப் பொறுப்பான மேயரை கைது செய்யாமல், அவருடைய கணவரை மட்டும் கைது செய்துள்ளனர். ஊழல்வாதிகளை காப்பாற்ற அரசே செயல்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதற்கான விசாரணை நடத்தப்படும்.
மக்களிடமிருந்து வசூலிக்கும் வரிகளை அடிப்படை வசதிகளுக்குப் பயன்படுத்தாமல், திமுகவினர் தங்களுக்குள் பங்கிட்டு வருகின்றனர். இதே நேரத்தில் மதுரை மாநகராட்சி ரூ.260 கோடி கடன் எடுக்க முடிவு செய்துள்ளது. அந்தக் கடனை இறுதியில் மக்கள்தான் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
பணத்தைப் பங்கிடுவதில் ஏற்பட்ட மோதலால் கோவை, காஞ்சிபுரம், நெல்லை மாநகராட்சிகளின் மேயர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் திமுக அரசுக்கு கமிஷன் சேர்கிறது. இந்த ஆட்சியால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இல்லை; ஸ்டாலின் குடும்பத்திற்கு மட்டும் செல்வச் செழிப்பு அதிகரித்துள்ளது.
முதல்வர் வெளிநாடு தொழில் முதலீடுகளை ஈர்க்கச் சென்றார் என்று கூறப்படுகிறது. உண்மையில், அவர் ஊழல் மூலம் குவித்த பணத்தை முதலீடு செய்வதற்காகவே வெளிநாடு சென்றுள்ளார். அதிமுக ஆட்சியில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தன. ஆனால் திமுக ஆட்சியில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் 10 சதவீதமும் நடைமுறைக்கு வரவில்லை,” என பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
இந்த கூட்டத்துக்கு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் கே. ராஜூ தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமைப்புச் செயலாளர் ராஜன்செல்லப்பா, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.