“முதல்வர் அதிக முதலீடுகளை ஈர்த்தது நாட்டுக்கு நல்லது தான்” – கமல்ஹாசன்
“தமிழக முதல்வர் வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்த்திருப்பது, நாட்டிற்கே நன்மை செய்திருக்கிறது” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“தெருநாய் பிரச்சினை குறித்து கேட்கிறீர்கள். தெருநாய்களை காப்பாற்ற வேண்டும் என பிராணி நல ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள். இதற்கான தீர்வு எளிதானது.
உலக வரலாறையும், சமூக சுகாதாரத்தையும் புரிந்தவர்கள், கழுதைகள் எங்கே போய்விட்டன என்று கவலைப்படுகிறார்களா? ஒருகாலத்தில் கழுதைகள் நமக்காக சுமைகள் சுமந்தன. இன்று அவற்றைக் காண முடியுமா? ‘கழுதைகளை காப்பாற்ற வேண்டும்’ என்று யாரும் பேசுவதில்லை. எனினும், எல்லா உயிர்களையும் முடிந்தவரை காப்பாற்ற வேண்டும். அதுவே என் நிலைப்பாடு.”
பாஜகவினர், முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை விமர்சிப்பதைப் பற்றி கேட்கப்பட்டதற்கு கமல்ஹாசன்,
“என் பார்வையில், ஒருவர் நல்லது செய்தால் அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதைக் கவனிப்பதில்லை. நாட்டிற்கு நன்மை தரும் காரியம் செய்தால், அது எதிர்க்கட்சி சார்ந்தவராக இருந்தாலும் பாராட்டப்பட வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்திருப்பது, முதல்வர் நாட்டுக்கே நன்மை செய்திருக்கிறார் என்பதற்கான உதாரணம்,” என்றார்.
பிஹாரில் நடந்த வாக்காளர் அதிகார யாத்திரை நிகழ்ச்சியின் போது, பிரதமரின் தாயாரை அவமரியாதையாக பேசப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து அவர்,
“யாரையும் அவமரியாதை செய்யும் வகையில் யாரும் பேச வேண்டியதில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் காணாமல் போவது, ஓட்டு கிடைக்காமல் போவது பற்றி நான் நீண்ட காலமாகவே கூறி வருகிறேன்.
என் பெயரே கூட வாக்காளர் பட்டியலில் இல்லாமல் போய்விட்டது. பெயர் காணாமல் போனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி திருத்தம் செய்துகொள்ள வேண்டும். இது பெரிய விஷயம் அல்ல. இதைவிடவும் பெரும் தவறுகள் நடந்ததாக சந்தேகம் ஏற்பட்டபோது, நாங்கள் கூட எழுத்து மூலம் முறையிட்டிருக்கிறோம். இத்தகைய குறைபாடுகள் எப்போதும் நடந்து கொண்டே இருக்கும். அதன் உச்சக்கட்டமே பிஹாரில் நடந்த சம்பவங்கள்,” என்று தெரிவித்தார்.