ஆன்லைன் பட்டாசு விற்பனை விளம்பரங்கள் – சைபர் க்ரைம் போலீசுக்கு விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் வழியாக பட்டாசு விற்பனைக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் தடைவிதித்த நிலையில், அதனைப் பற்றிய விளம்பரங்கள் வெளியாகும் சூழலில், புகார் அளிக்கப்பட்டால் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்புத் தலைவர் ராஜ சந்திரசேகரன், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தது:
2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. ஆனால் தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு இணைய தளங்களில் பட்டாசு விற்பனை தொடர்பான விளம்பரங்கள் பரவலாக வெளியிடப்படுகின்றன. இது, உச்சநீதிமன்ற உத்தரவை நேரடியாக மீறுவதாகும். எனவே, ஆன்லைன் பட்டாசு விற்பனை மற்றும் அதற்கான விளம்பரங்களைத் தடுக்கவும், இதனை வெளியிடுவோருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இந்த மனு நீதிபதி சுந்தர மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரருக்காக மூத்த வழக்கறிஞர் சுபாஷ்பாபு வாதிட்டார். மத்திய மற்றும் மாநில அரசுகள் தரப்பில், “ஆன்லைன் பட்டாசு விற்பனை தொடர்பாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி, “மனுதாரர் சைபர் க்ரைம் எஸ்பியிடம் புதிய புகார் அளிக்கலாம். அந்த புகாரை பெற்ற பிறகு சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். மனு முடிக்கப்பட்டது.