தெருநாய் பிரச்சினைக்கு வெளிநாட்டு முறைமைகளைப் பின்பற்றலாம் – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னையில் தெருநாய் பிரச்சினையை சமாளிக்க வெளிநாடுகளில் எப்படிக் கையாளப்படுகின்றது, என்ன தீர்வுகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து, அவற்றை இந்தியாவிலும் பயன்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் தாக்கல் செய்த பொது நல வழக்கில், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாமல் அழைத்துச் செல்லப்பட்ட ராட்வீலர் நாய்கள் கடித்து சிறுவர்கள், சிறுமியர்கள், மூத்தவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதுபோன்ற ஆவேச நாய்களை தடைசெய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த வழக்கின் முன் விசாரணையின் போது, தெருநாய்களைப் பிடித்து கருத்தடை, தடுப்பூசி செய்து மீண்டும் அதே பகுதியில் விடுவதற்கு பதிலாக, தனித்த காப்பகங்கள் அமைத்து பராமரிக்க திட்டம் வகுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு, தெருநாய் பிரச்சினை தொடர்பாக பல மாநில உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றம் தன்னிடம் கொண்டு சேர்த்துள்ளதாக தெரிவித்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தெருநாய் பிரச்சினை மிக முக்கியமானது என்றும், “தெருக்களில் இருந்து பிடித்து, இனப்பெருக்க கட்டுப்பாடு செய்த நாய்களை மீண்டும் விடும் போது, ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களை எங்கு பராமரிக்கப் போகிறீர்கள்?” என அரசிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, தனி காப்பகங்கள் அமைக்கப்படும் என அரசு தரப்பு தெரிவித்தது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “அப்படிப் பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டால், அந்த நாய்களுக்கு உணவளிக்க யார் முன்வருவார்? அவற்றை கையாள வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், மிருகவதை சட்டத்தின் பெயரில் தொண்டு நிறுவனங்கள் வழக்கு தொடரும் அபாயமும் உண்டு. எனவே வெளிநாடுகளில் தெருநாய் பிரச்சினை எப்படிச் சமாளிக்கப்படுகிறது என்பதைப் பார்த்து, அதை நம் நாட்டிலும் பின்பற்றலாம்” என்று கருத்து தெரிவித்தனர்.

Facebook Comments Box