ஜிஎஸ்டி 2.0: சீரமைப்பு நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை – தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
தனிநபர் ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சேவைகளுக்கு வரிவிலக்கு அளிக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டியுள்ளார். அதேசமயம், மாநிலங்களின் வருவாய் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற 56வது சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், தமிழக அரசின் சார்பில் கருத்துகளை வெளிப்படுத்தினார். அப்போது, காப்பீடு உள்ளிட்ட துறைகளுக்கான வரிவிலக்கை வரவேற்றதோடு, மாநில வருவாயை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்புத் திருத்தம் மூலம் தற்போதைய மேல்வரியைத் தொடரவோ அல்லது ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்து உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டும் உச்ச வரி வரம்பை அதிகரிக்கவோ வேண்டும் என்றார்.
மேலும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தீர்வு நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான அலுவலர்கள் குழுவின் பரிந்துரைகள் விரைவாக முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவை இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என மன்றம் ஒப்புதல் அளித்தது.
ஏற்றுமதி மற்றும் தலைகீழ் வரி அமைப்பின் கீழ் தற்காலிகமாக ஜிஎஸ்டி திருப்பி வழங்கும் தானியங்கி முறையையும், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான எளிதாக்கப்பட்ட பதிவு முறையையும் அமைச்சர் வரவேற்றார்.
மேலும், உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு இழப்பீட்டு மேல்வரியை 2 முதல் 3 மாதங்களுக்கு நீட்டிக்க மன்றம் பரிந்துரைத்துள்ளதாகவும், தமிழக அரசின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் நிதித்துறை செயலர் த. உதயசந்திரன், தகவல் தொழில்நுட்பச் செயலர் பிரஜேந்திர நவ்னிட், வணிகவரி ஆணையர் எஸ். நாகராஜன் ஆகியோரும் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தில் பதிவிட்ட தங்கம் தென்னரசு, “மருந்துகள், ஆயுள் காப்பீடு, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான வரிக் குறைப்புகளை வரவேற்கிறேன். ஆனால், மாநிலங்களின் வருவாய் வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான தேவையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். மேலும், ஜிஎஸ்டி தீர்வு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் பரிந்துரைகள் விரைவில் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.