காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் – நவம்பர் 30க்குள் தமிழகமெங்கும் அமல்படுத்த உச்சிகெடு

தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவம்பர் 30ஆம் தேதிக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

வனம், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரதசக்கரவர்த்தி தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

  • தற்போது 15 மாவட்டங்களில் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது; 7 மாவட்டங்களில் பகுதியளவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • வேலூர், சேலம், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள 850 டாஸ்மாக் கடைகளில், இந்தத் திட்டத்தின் கீழ் 113.81 கோடி பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.
  • அதில் 71.39 கோடி பாட்டில்கள் டாஸ்மாக் மூலம், 40.62 கோடி பாட்டில்கள் பார்கள் வழியாக திரும்பப் பெறப்பட்டன.
  • மொத்தத்தில் 98.09 சதவீதம் பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
  • பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதல் வசூலித்ததால் 17.86 கோடி ரூபாய் அரசிடம் கையிருப்பில் உள்ளது; தனி வங்கி கணக்கில் பராமரிக்கப்படுகிறது.
  • புதிய பார் ஏலங்களில், காலி பாட்டில்களை திரும்ப அளிக்க வேண்டிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து பாட்டில்களும் QR கோடு மூலம் கண்காணிக்கப்படுகிறது.

மேலும், பாட்டில் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றபோதும், சில நிறுவனங்கள் பங்கேற்காததோடு, சிலர் ஒப்புக்கொள்ளாமலும், சிலர் கால அவகாசம் கோரியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், “மேலும் கால அவகாசம் வழங்க முடியாது. திட்டம் முழு மாநிலத்திலும் நவம்பர் 30க்குள் அமல்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தனர். அதோடு, திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை விளக்கும் அறிக்கையை தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Facebook Comments Box