வரலாற்று முக்கிய முடிவுகள்: ஜிஎஸ்டி 2.0க்கு பழனிசாமி வரவேற்பு
ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று முக்கிய முடிவுகளை அதிமுக வரவேற்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, (புதன்கிழமை) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் 22-ஆம் தேதி முதல் புதிய கட்டமைப்பில் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழேயே ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, “ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று முக்கிய முடிவுகளை அதிமுக வரவேற்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் தெளிவான பார்வையும் தலைமைத்துவமும் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டியது. அதேபோல் எளிமையாக்கப்பட்ட, வளர்ச்சிக்கு ஆதரவான ஜிஎஸ்டி கட்டமைப்பை உருவாக்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பாராட்டுக்கள்” என தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள், சுகாதார சேவைகள், வேளாண் உள்ளீடுகள் மற்றும் காப்பீட்டு சேவைகள் மீது இனி 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழே ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இதனால் வரி எளிமை, நியாயம் மற்றும் பொருளாதார வளர்ச்சி உறுதி செய்யப்படும். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் வரிசையை எளிதாக்கி, நுகர்வோர் நம்பிக்கையையும் உயர்த்தி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.