“இபிஎஸ் மீது நான் தவறாக பேசியதாக பரப்பப்படுவது உண்மையல்ல” – பிரேமலதா விளக்கம்
“எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என்று நான் பேசியதாகக் கூறி பரப்பிய அனைத்து ஊடகங்களையும் கண்டிக்கிறேன்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அவர், பத்திரிகையாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:
“நான் சொல்லாத விஷயங்களை, நான் சொன்னதாகச் செய்திகளில் வெளியிடுவது முற்றிலும் தவறு. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் உண்மையில் என்ன பேசுகிறோமோ அதை மட்டும் பிரசுரிக்க வேண்டும். அண்ணன் எடப்பாடியைப் பற்றி நான் பேசியதாக சில செய்திகளில் கூறப்படுகிறது. எங்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் கேட்ட கேள்விக்கு நான் பதிலளித்தேன். அதனை அடிப்படையாகக் கொண்டு ‘இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார்’ என்று நான் சொன்னதாகப் பரப்புவது முற்றிலும் தவறு. அதற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.
நான் சொல்லாத ஒரு வார்த்தையை என் வாயிலிருந்து வந்தது போலக் காட்டக் கூடாது. அந்த மாதிரியான சொற்கள் எனது வாயிலிருந்து வரவே வராது. நாங்கள் கட்சிக்குள் எதை வேண்டுமானாலும் ஆலோசனை செய்வோம். ஆனால் அதை ஊடகங்களுக்கு சொல்ல முடியுமா? ஊடகங்களுக்கு நான் தரும் பேட்டியைத்தான் நீங்கள் செய்தியாக வெளியிட வேண்டும்.
ஆனால் உங்களுடைய சுயலாபத்திற்காக செய்தியை மாற்றி திரித்து வெளியிடுவதை நிறுத்துங்கள். மேல்மருவத்தூர் அம்மன் முன்னால் கேட்டுக் கொள்கிறேன் – இனிமேல் இப்படியே தொடர்ந்தால், பத்திரிகையாளர் சந்திப்புக்கே வர வேண்டாம்” என்று பிரேமலதா வலியுறுத்தினார்.