குரோம்பேட்டை, பல்லாவரம் கால்வாய் ஆக்கிரமிப்பு – ஆட்சியரிடம் உயர் நீதிமன்றம் விளக்கம் கோரி உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை மற்றும் பல்லாவரம் பகுதிகளில் வெள்ளப்பெருக்குக்கு காரணமாகியுள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாவட்ட ஆட்சியரிடம் பதில் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டேவிட் மனோகர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “குரோம்பேட்டை, பல்லாவரம், ஜிஎஸ்டி சாலை பகுதிகளில் மழைக்காலங்களில் அடிக்கடி கடுமையான வெள்ளம் ஏற்படுகிறது. சாலையோர கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதுடன், அவை குப்பைகள் கொட்டும் இடங்களாக மாறியுள்ளன. பல பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதியே இல்லை.

பல்லாவரம் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் நீர், குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் அருகே, தாம்பரம் அரசு மருத்துவமனை அருகே, பாண்ட்ஸ் சிக்னல் அருகே செல்லும் கால்வாய்கள் வழியாக பாய வேண்டும். ஆனால் இக்கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் மறைக்கப்பட்டுள்ளதால், மழைநீர் சாலைகளில் வழிந்து, தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர், முதன்மைச் செயலர், பொதுப்பணித்துறை செயலர் ஆகியோருக்கு மனு அனுப்பியிருந்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனக் கூறினார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஒய். கவிதா வாதிட்டார்.

விசாரணைக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 3 வாரங்களில் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

Facebook Comments Box