கோபியில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் திரள் – முக்கிய அறிவிப்பு எதிரொலி
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று கோபியில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதால், அங்குள்ள கட்சி அலுவலகம் பரபரப்பாகியுள்ளது.
சமீபத்தில் கோபியில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய அவர், செப்டம்பர் 5-ம் தேதி ‘மனம் திறந்து பேசுவேன்’ என்று தெரிவித்திருந்தார். இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் ஆர்வமும், அரசியல் பரபரப்பும் எழுந்தது.
இந்நிலையில், இன்று காலை முதல் கோபி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் அவரது உரையை ஒளிபரப்ப பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், உள்ளூர்வாசிகளும் ஷேர் ஆட்டோக்களில் அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.
பின்னணி: பிப்ரவரி மாதம் அன்னூரில் நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததை கண்டித்து செங்கோட்டையன் பங்கேற்காமல் இருந்தார். தொடர்ந்து, பொதுச் செயலாளர் பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் உரையாற்றியதும் அவரது அதிருப்தியை வெளிப்படுத்தியது. ஆனால் இதுவரை கட்சித் தலைமை அவரை சமாதானப்படுத்த எதுவும் செய்யவில்லை.
சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்களிடம், “செப்டம்பர் 5-ம் தேதி முழுமையாக பேசுவேன். அதுவரை காத்திருக்கவும்” என்று தெரிவித்திருந்தார். இதனால், அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணையப்போகிறார் என்ற வதந்தி உட்பட பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.
இந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில், இன்று கோபி முழுவதும் அரசியல் சூடேறியுள்ளது.