ரசாயன நிறுவனம் மீது வருமான வரித்துறை சோதனை
வரி ஏய்ப்பு குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தனியார் ரசாயன உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விரிவான சோதனையை மேற்கொண்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
சென்னை தியாகராயநகர் வடக்கு கிரசன்ட் சாலையில் அமைந்துள்ள ஆர்க்கியன் கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் நேற்று காலை 10 மணி அளவில் அதிகாரிகள் சோதனை ஆரம்பித்தனர். இதனுடன் தொடர்புடைய வடபழனி, ஆழ்வார்பேட்டை, எம்ஆர்சி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் சுமார் 100 அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடல் நீரில் இருந்து மூலப்பொருட்களை பிரித்து ரசாயனங்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து, கடந்த கால வருமான வரி பதிவுகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் முறைகேடுகள் இருப்பதாக தெரிய வந்ததால், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின்போது வெளிநாட்டு கொள்முதல், ஏற்றுமதி தொடர்பான ஆவணங்கள் மற்றும் முதலீட்டு பதிவுகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த சோதனை இன்னும் ஓரிரு நாட்கள் நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், முழுமையான தகவல்கள் சோதனை முடிந்த பின்பு மட்டுமே வெளியிடப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.