இபிஎஸ் முடிவே எங்கள் முடிவு: திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய கருத்து குறித்து, “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவே எங்கள் முடிவு, அவர் சொல்வதே எங்கள் கருத்து” என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன், அமைப்புச் செயலாளர் மருதராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் பல அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வ.உ.சி சிலைக்கு மாலை அணிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “செங்கோட்டையன் அவர்கள், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டியது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். நாங்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம். அவரின் கருத்துதான் எங்களின் கருத்து” என்றார்.
பின்னர் திண்டுக்கல்லில் நடைபெற்ற கோபாலநாயக்கரின் 221ஆவது நினைவு தின நிகழ்ச்சியிலும் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், நத்தம் ஆர். விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.