செங்கோட்டையன் மூலம் பழனிசாமிக்கு பாஜக மறைமுக அழுத்தம்: திருமாவளவன்

அதிமுக ஒருங்கிணைப்புப் பணிகளில் செங்கோட்டையன் செயல்படுவது, பாஜக பழனிசாமிக்கு மறைமுக அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே விசிக சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன், பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.

அவர் கூறியதாவது:

“அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான செங்கோட்டையனின் முயற்சி பாராட்டத்தக்கது. அது அவர்களது உள்கட்சித் திட்டமாக இருந்தாலும், பெரியாரின் சிந்தனைகளின் பாதையில் தோன்றிய அரசியல் இயக்கமாக அதிமுக இருந்ததால் அதன் மீதான நம் கவலை, மதிப்பீடு இயல்பானதே. அதனை பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற சக்திகள் பிடியில் சிக்க வைத்து சீரழிய விடக்கூடாது என்கிற நிலைப்பாடு எங்களிடம் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.

இன்றும் அதே கவலைதான் உள்ளது. செங்கோட்டையன் எந்த சூழலில் செயல்படுகிறார் என்பது தெளிவில்லை. ஆனால் இதற்குப் பாஜகவின் பங்கு இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. அப்படி இருந்தால், அதிமுகவின் எதிர்காலத்துக்கு அது உகந்ததல்ல. பழனிசாமிக்கு பாஜகவே மறைமுக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்ற விமர்சனம் தற்போது வலுவாகக் கேட்கப்படுகிறது.

பாஜக, பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளை மெதுவாக பலவீனப்படுத்தி வந்த வரலாறு உண்டு. அதே நிலை அதிமுகவுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே எங்கள் அச்சம்.

செங்கோட்டையன் இன்னும் தெளிவாக கருத்து தெரிவிக்கவில்லை. யாரைச் சேர்க்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறாமல், மூத்த தலைவர்களை ஒருங்கிணைப்பேன் என மட்டும் சொல்கிறார். அவர் ஏற்கெனவே இதுபோன்ற கருத்துக்களை முன்வைத்தும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இப்போது கூட புதிதாக எதையும் சொல்லாததால் வரவிருக்கும் தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்படாது என நான் கருதுகிறேன்.

சசிகலா, திமுகவை தோற்கடிப்போம் என்கிறாரா அல்லது திமுக கூட்டணியை வெல்வோம் என்கிறாரா என்பது தெளிவாக இல்லை. திமுக கூட்டணியை மக்கள் விட்டு விலகப்போவதில்லை; அதற்கு வலுவான ஆதரவு உள்ளது. எனவே திமுக கூட்டணிக்கு எதிராக நிற்கும் வலுவான அணியை உருவாக்க அதிமுக இன்னும் முழுமையாக ஒருங்கிணைந்த கட்சியாக தன்னை நிரூபிக்கவில்லை என்பதே செங்கோட்டையனின் பேச்சில் வெளிப்படுகிறது.

அதிமுக வலிமை பெற வேண்டியது அவசியம். ஆனால் அதிமுகவும், தமிழகத்தில் வேர் பரப்ப முடியாத பாஜகவும் மட்டும் இணைந்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை எதிர்கொள்வது சாத்தியமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகள் பல வெளியேறியுள்ளன; தினகரன் ஏற்கெனவே விலகியுள்ளார். தேமுதிக, பாமக ஆகியவை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. எனவே தமிழகத்தில் அந்த கூட்டணி இன்னும் வலுவான வடிவம் பெறவில்லை.”

அவர் மேலும் கூறியதாவது:

“ஜிஎஸ்டி மறுசீராய்வு சிறுகுறு தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் இல்லை. முந்தைய 28 சதவீத வரி, சில பொருட்களுக்கு 48 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது அமெரிக்கா விதித்திருக்கும் வரி அழுத்தத்திலிருந்து திசைதிருப்பும் கண்துடைப்புச் செயலாக மட்டுமே தெரிகிறது.”

மேலும், “லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாரின் சிலை, அவரது சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவுவதை உறுதிசெய்கிறது. சாக்ரடீஸ் போன்று பெரியாரும் சர்வதேச அளவில் போற்றப்படுவார்” எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.

Facebook Comments Box