விஜய் மாநாட்டு சர்ச்சை: தொண்டர் தூக்கி வீசப்பட்ட வழக்கில் ஆதாரம் கேட்டு போலீஸ் அறிவுறுத்தல்
மதுரையில் நடைபெற்ற விஜய் கட்சியின் மாநில மாநாட்டில், தொண்டர் ஒருவரை பவுன்சர்கள் தூக்கி வீசிய சம்பவம் தொடர்பான வழக்கில், புகார் அளித்தவரிடம் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 21 அன்று மதுரை-தூத்துக்குடி சாலையில் கூடக்கோவில் அருகே, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் தோன்றிய விஜய், முன்னால் அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக்கில் நடந்துகொண்டிருந்தார். அதில் பாதுகாப்பு வலயத்தை மீறி சில தொண்டர்கள் மேடைக்கு ஏறி விஜய்க்கு கை கொடுத்தனர். இதை கட்டுப்படுத்த முயன்ற பவுன்சர்கள், ஒருவரை தூக்கி கீழே வீசினர். அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையத்தை சேர்ந்த தொண்டர் சரத்குமார், “பவுன்சர்கள் என்னை தூக்கி வீசியதால் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டது” எனத் தனது தாயாருடன் சேர்ந்து பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து குன்னம் போலீஸார் தவெக தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். சம்பவம் நடந்த இடம் மதுரை மாவட்ட கூடக்கோவில் காவல் நிலைய வரம்பில் இருப்பதால் வழக்கு அங்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையில், தூக்கி வீசப்பட்டவர் சரத்குமார் அல்ல; வேலூரைச் சேர்ந்த தொண்டர் அஜித்குமார் என்பதாக சில தகவல்கள் பரவின. இதையடுத்து சரத்குமாரையும், அவரது தாயாரையும் மதுரை எஸ்.பி அரவிந்த் அழைத்து விசாரித்தார். கூடக்கோவில் காவல் நிலையத்திலும் ஆய்வாளர் சாந்தி அவரை விசாரித்தார்.
விசாரணைக்குப் பின் போலீஸார் தெரிவித்ததாவது:
“சரத்குமார் தான் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் என்று அவர் கூறுகிறார். ஆனால், தூக்கி வீசப்பட்டவர் வேலூரைச் சேர்ந்த அஜித்குமார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரின் உருவ ஒற்றுமை குறித்து தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. ரேம்ப் வாக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டவர் சரத்குமார் தான் என்பதை உறுதி செய்யும் வகையில், அவர் மதுரைக்கு சென்றதை நிரூபிக்கும் வீடியோ, புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். பின்னர் சம்பந்தப்பட்ட பவுன்சர்களையும் சம்மன் அனுப்பி விசாரிப்போம்” என்றனர்.