ஆவின் பாலில் கலப்படம்: அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 28 பேருக்கு எதிரான வழக்கு ரத்து

ஆவின் பாலில் கலப்படம் செய்ததாக அதிமுக தென் சென்னை முன்னாள் மாவட்டச் செயலாளர் வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி உள்ளிட்ட 28 பேர்மீது பதியப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து சென்னைக்கு ஆவின் பாலைக் கொண்டு வந்த டேங்கர் லாரிகளில் இருந்து பாலை திருடி, அதற்குப் பதிலாக தண்ணீர் கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அப்போதைய அதிமுக தென் சென்னை மாவட்டச் செயலாளர் வைத்தியநாதன், அவரது மனைவி உள்ளிட்ட 28 பேர்மீது விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸாரிடம் மாற்றப்பட்டு, குற்றப்பத்திரிகை விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கள்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வைத்தியநாதன், அவரது மனைவி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி என். சதீஷ்குமார் விசாரித்தார்.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லை என்று வாதித்தார். அதேபோல் அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், ஆவின் நிர்வாகம் நடத்திய விசாரணையில் எந்தவொரு கலப்படமும், திருட்டும் நடைபெறவில்லை; லாரிகளில் வைக்கப்பட்டிருந்த சீலும் களைப்படவில்லை என்ற அறிக்கையை சமர்ப்பித்தார்.

இருதரப்பின் வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, குற்றச்சாட்டுகளுக்குத் தெளிவான ஆதாரம் எதுவும் இல்லாததால், வழக்கைத் தொடர்ந்து விசாரிப்பதில் பயன் இல்லை எனக் குறிப்பிட்டு, 2014 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Facebook Comments Box