பாஜக கூட்டணிக்கு தெளிவான இலக்கு இல்லை: துரை வைகோ விமர்சனம்

திருச்சியில், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154வது ஜெயந்தியை முன்னிட்டு, மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்சி எம்.பியுமான துரை வைகோ, சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“வருவாய்த் துறை ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு. ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊழியர்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். செப்டம்பர் 15ஆம் தேதி திருச்சி அருகே சிறுகனூரில் நடைபெறும் அண்ணா பிறந்த நாள் மாநாட்டில், மதிமுகவின் வலிமையை தமிழக மக்கள் உணரும் வகையில் மாபெரும் திரளுடன் நடத்த உள்ளோம். இந்த மாநாட்டுக்கு எங்களது கூட்டணி கட்சிகளை அழைக்கவில்லை; ஆனால் அவர்களின் ஆதரவும் நல்வாழ்த்துகளும் எங்களுக்குண்டு” என்றார்.

அதே சமயம், பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்த அவர்,

“அந்த கூட்டணியில் இருப்பவர்களுக்கு கூட இலக்கு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கொள்கை அடிப்படையில் அல்லாமல், திடீர் முடிவுகளின் பேரில்தான் கட்சிகள் உள்ளே சென்று வெளியேறுகின்றன. ஏன் வெளியேறுகிறார்கள் என்பதையும் அவர்கள் சொல்ல முடியவில்லை. அதனால் பாஜக கூட்டணி ஒரு நிலையானதல்ல” என்று கருத்து தெரிவித்தார்.

பின்னர் தஞ்சாவூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர்,

“மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது. குறிப்பாக மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு ஆகியவற்றுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பது நல்லது. ஆனால் சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது. மத்திய நிதி அமைச்சர் இதை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும். ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும். பாஜக கூட்டணி என்பது ஒற்றுமையற்றதும், தொலைநோக்கு சிந்தனை அற்றதுமான கூட்டணியாகவே உள்ளது” என்றார்.

Facebook Comments Box