தனியார் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் 90,000 பேருக்கு போக்சோ சட்டம் குறித்த பயிற்சி – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 90 ஆயிரம் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டம் (போக்சோ) குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தனியார் பள்ளிகள் இயக்ககம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு முகாமை, அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், எம்எல்ஏக்கள் மதியழகன், பிரகாஷ், மேயர் சத்யா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் உரை:

“முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.4.94 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 90,000 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முழு நம்பிக்கையுடன் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கிறார்கள். அந்த நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டும். பள்ளிகளில் ஏதேனும் பாலியல் குற்றச்செயல்கள் நடந்தால், அதை மறைக்காமல் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு, நம் குழந்தைக்கு ஏற்பட்டது என்ற உணர்வுடன் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

மாணவர்களின் நடத்தை மாற்றங்களை கவனித்துக் கொண்டு, அவர்கள் சிரமத்தில் இருந்தால் உடனே பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். குழந்தைகளின் மனநிலையை கண்காணிப்பது ஆசிரியர்களின் முக்கியப் பொறுப்பு.

அரசு, அரசு உதவி, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1 கோடி 29 லட்சம் மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ‘எங்கள் பள்ளியில் பாலியல் குற்றங்கள் நடைபெறக்கூடாது’ என்ற உறுதிப்பாட்டுடன் ஆசிரியர்கள் பணி புரிய வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 14417 மற்றும் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவை பாடப்புத்தகங்களிலும் அச்சிடப்பட்டுள்ளன.” என்றார்.

போக்சோ சட்டத்தில் மாற்றம் தேவையில்லை

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

“போக்சோ சட்டத்தில் ஏற்கெனவே கடுமையான நடைமுறைகள் உள்ளன. போலியான புகார் அளித்தாலும் விசாரணையில் உண்மை வெளிப்படும். எனவே சட்டத்தில் திருத்தம் செய்ய தேவையில்லை. ஆனால், சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பது முக்கியம்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் இணை இயக்குநர்கள் மார்ஸ், கணேசமூர்த்தி, பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத்தலைவர் முத்துக்குமார், கல்வி அலுவலர்கள் முனிராஜ், கோபாலப்பா, டீன் சத்யபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box