“பழனிசாமிக்கு அதிமுக சொந்தமில்லை” – செங்கோட்டையனை சந்தித்த பெங்களூரு புகழேந்தி
“பழனிசாமிக்கு அதிமுக கட்சி சொந்தமில்லை என்பதை நீதிமன்றமும், மக்கள் மன்றமும் தெளிவாகக் கூறியுள்ளனர்” என செங்கோட்டையனை சந்தித்த பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில், அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தி இன்று நேரில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினர். இதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
“கட்சியை அழிக்கும் பணியில் இபிஎஸ் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையை மக்கள், தொண்டர்கள் ஏற்கவில்லை. கட்சியை ஒருங்கிணைக்காதால், அதிமுக 4-ம் இடத்திற்கு சரிந்துவிடும். நாம் தமிழர் கட்சியோடுதான் போட்டி நடத்த வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல் செய்து, கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையவர்களை முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் மன வருத்தம் உள்ளது. ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்ட அனைவரும் இணைந்து செயல்பட உள்ளோம். நாங்கள்தான் உண்மையான அதிமுக. பழனிசாமிக்கு இதன் சொந்தம் இல்லை என்பதை நீதிமன்றமும் மக்கள் மன்றமும் உணர்த்தியுள்ளனர்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, கோபி தொகுதியில் அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் தங்களது ராஜினாமா கடிதத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அனுப்ப முடிவு செய்ததாகவும், இதனால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்பு செய்தியாளர்களிடம் கூறியது:
“அதிமுக மூத்த முன்னோடி செங்கோட்டையன். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். இதற்காக அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமா என்று மக்கள் கேட்கிறார்கள். செங்கோட்டையன் நீக்கப்படுவது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை. இதற்கு மக்கள் பாடம் புகட்டுவர்.
கழகத்தில் பிரிந்து கொண்ட பின்னர் தொடர்ந்த தோல்விகள் அதிமுகக்கு ஏற்பட்டுள்ளன. 11 தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தொடர்ந்த தோல்வியிலிருந்து மீள்வது அவசியமா என்பது மக்களின் கேள்வி. விடுபட விரும்பினால் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது ஒரு கோடி தொண்டர்களின் விருப்பம்” என்று அவர் தெரிவித்தார்.