லண்டனில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்
முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், லண்டனில் உள்ள கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகம் (SOAS) சென்றார். அங்கு அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் ஸ்டாலின் பதிவிட்டதாவது:
“SOAS பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு வணக்கம் செலுத்தி, எப்போதும் உயிர்ப்புடன் திகழும் தமிழ் பண்பாட்டையும், அறிவின் பொக்கிஷமாகிய திருக்குறளையும் போற்றினேன். பின்னர், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இந்திய வம்சாவளி மாணவர்கள், பட்டதாரிகளுடன் உரையாடினேன். திமுக அரசு செயல்படுத்தும் அனைவர் சேர்க்கை வளர்ச்சி, இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்களின் பங்கு போன்ற விஷயங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன். மேலும், இந்திய அரசியமைப்பு 75 ஆண்டுகளை எட்டியதையொட்டி அதன் மக்களாட்சி பாரம்பரியம் மற்றும் தற்போதைய தொடர்பு குறித்து நடைபெறும் பிஎச்டி கண்காட்சியையும் பார்வையிட்டேன்,” என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் அறிஞர் ஜி.யு. போப்பின் கல்லறைக்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது, “ஆக்ஸ்போர்டு சென்று அங்கு உறங்கும் தமிழ் மாமேதையை போற்றாமல் வருவது அறமாகுமோ?” என அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
அதன்பின், உலகப் புகழ் பெற்ற சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் நினைவிடத்திலும் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அதுகுறித்து அவர், “தத்துவஞானிகள் பல்வேறு விதங்களில் உலகை விளக்கியுள்ளனர். ஆனால் உழைக்கும் மக்களுக்கு ஒளி தந்த சிவப்பு சூரியனாம் கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினேன்” என குறிப்பிட்டார்.
மேலும், லண்டன் பொருளியல் பள்ளியில் (LSE) கல்வி பயிலும் காலத்தில் அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தையும் முதல்வர் பார்வையிட்டார். இதுகுறித்து அவர்,
“அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தில் நடந்துசென்றபோது பெரும் வியப்பை உணர்ந்தேன். இந்தியாவில் சாதியால் ஒடுக்கப்பட்ட ஒரு இளைஞன், இங்கே கல்வியின் மூலம் உயர்ந்து, பின்னர் இந்திய அரசியமைப்பை உருவாக்கும் நிலைக்கு சென்றார். குறிப்பாக, பெரியார் மற்றும் அம்பேத்கர் உரையாடிய புகைப்படம் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அந்த தருணம் எனக்கு பெரும் உணர்ச்சியை ஏற்படுத்தியது,” என்று பதிவிட்டார்.