கூட்டணி கட்சிகளுக்கான இட ஒதுக்கீட்டில் திமுகவின் புதிய ‘பார்முலா’: கறாராக இருக்கிறார் ஸ்டாலின்?
வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணிக் கட்சிகளுக்கான (காங்கிரஸ், விசிக உள்ளிட்டவை) இட ஒதுக்கீட்டை குறித்து திமுக தலைமையகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக ஆகிய நான்கு முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், கொமதேக, மக்கள் நீதி மய்யம், ஐயூஎம்எல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. கூடுதலாக, தேமுதிக உட்பட சில கட்சிகளுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால், திமுக தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க விரும்புகிறது. அதற்காக கூட்டணி கட்சிகளுக்கான இட ஒதுக்கீட்டை குறைக்கும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலின் கணக்கு
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக காங்கிரஸுக்கு 25, விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக ஆகியவற்றுக்கு தலா 6, கொமதேக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு தலா 3, மற்ற சிறிய கட்சிகளுக்கு 6 இடங்களை ஒதுக்கியது.
இதன்மூலம் திமுக தனியாக 188 தொகுதிகளில் போட்டியிட்டு, 133 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சிகள் 46 தொகுதிகளில் போட்டியிட்டதில் 26 இடங்களில் மட்டும் வெற்றியடைந்தன. மொத்தம் 159 இடங்களை திமுக கூட்டணி வென்றது.
புதிய இலக்கு
அடுத்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு குறைந்தபட்சம் 200 தொகுதிகள் வெல்ல வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடம் வழங்காமல், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டுமே கொடுக்க முடிவு செய்துள்ளார்.
சாத்தியமான இட ஒதுக்கீடு
- காங்கிரஸ்: 20 (முந்தைய 25-ல் இருந்து குறைப்பு)
- கம்யூனிஸ்ட் கட்சிகள்: 8 (முந்தைய 12-ல் இருந்து குறைப்பு)
- ஐயூஎம்எல்: 1 (முந்தைய 3-ல் இருந்து குறைப்பு)
- விசிக: 8 (முந்தைய 6-ல் இருந்து உயர்வு)
- சிறிய கட்சிகள்: சில இடங்கள், ஆனால் பெரும்பாலும் திமுக சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு.
மேலும், தேமுதிக போன்ற புதிய கட்சிகள் இணைந்தால், ஒதுக்கீட்டில் மாற்றங்கள் ஏற்படலாம். எந்தக் கட்சிக்கும் பலவீனமான தொகுதிகள் தரப்படமாட்டாது; வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள இடங்களே வழங்கப்படும்.
ஸ்டாலின், “தேர்தல் வெற்றிக்கான முழுப் பொறுப்பையும் திமுக ஏற்கும்; கூட்டணி கட்சிகளுக்கு தேவையான இடங்களை மட்டுமே நியாயமாக வழங்கப்படும்” என்று தனது அணியினரிடம் உறுதியளித்திருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.