ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தில் முதல்வர் ஸ்டாலின் – ரூ.15,516 கோடி முதலீடுகள் தமிழகத்துக்கு
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணம் மூலம் மொத்தம் ரூ.15,516 கோடி மதிப்பிலான முதலீடுகள் கிடைத்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
முதலில் ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி ரூ.7,020 கோடி முதலீடு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் சுமார் 15,320 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து லண்டனில் நடந்த ‘டிஎன் ரைசிங் ஐரோப்பா’ நிகழ்வில், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட இந்துஜா குழுமம், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி, சேமிப்பு அமைப்புகள் மற்றும் சார்ஜிங் நிலையங்கள் உள்ளிட்ட துறைகளில் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனால் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், அஸ்ட்ராஜெனகா நிறுவனம் சென்னை உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.176 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. இதனுடன் உற்பத்தி, ஜவுளி தொழில்நுட்பம், வடிவமைப்பு கல்வி உள்ளிட்ட துறைகளில் ரூ.820 கோடி முதலீடுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம், முதல்வரின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணத்தால் மொத்தமாக ரூ.15,516 கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. இதன் அடிப்படையில் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
இந்த வெற்றியைப் பற்றி தனது வலைதளப் பதிவில் முதல்வர் ஸ்டாலின், “இவை வெறும் எண்கள் அல்ல; இவை நமது இளைஞர்களின் வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இதுவே திராவிட மாடலின் செயல்விளைவு” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.