அதிமுகவை ஒன்றிணைக்க 10 நாள் அவகாசம் கேட்ட செங்கோட்டையன் – கட்சிப் பொறுப்புகள் நீக்கம் : முழு விவரம்
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க 10 நாளுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத் தலைமையிடம் கோரிக்கை வைத்திருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தனது கருத்து வெளியீட்டின் பின்னர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் அனைத்தும் தயாரிப்புகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. அதிமுக கடந்த ஜூலை மாதம் முதலே பிரச்சாரத்தைத் தொடங்கி, நூறு தொகுதிகளுக்கு மேல் பிரச்சாரங்களை முடித்துள்ளது.
இந்த நிலையில், மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சி ஒன்றிணைப்பு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை அரவணைக்க வேண்டும். 10 நாள் கால அவகாசம் தருகிறேன். அந்தக் காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஒரே கருத்தில் உள்ளவர்களுடன் இணைந்து, அதிமுகவில் பிரிந்து போனவர்களை ஒன்றிணைக்க முயல்கிறேன். ஒன்றுபடாமல் இருந்தால், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர முடியாது,” எனக் கூறினார்.
அவரது இந்தக் கருத்து அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திண்டுக்கல்லில், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோருடன் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இரண்டு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையின் முடிவில், செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கவும், அவரை ஆதரிக்கும் நிர்வாகிகளையும் பதவியிலிருந்து விடுவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் வெளியிடப்பட்ட உத்தரவில்,
“அமைப்பு செயலாளராகவும், ஈரோடு புறநகர் – மேற்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்த கே.ஏ. செங்கோட்டையன் செப்டம்பர் 6 முதல் அந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார். புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படும் வரை, அந்தப் பொறுப்புகளை முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ மேற்கொள்வார்,” என அறிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை கடும் அதிருப்தியுடன் எதிர்த்து, கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்,
“ஜனநாயக ரீதியில் எவரும் கட்சிக்காக கருத்து தெரிவிக்கலாம் என்று பொதுச் செயலாளர் தான் கூறி வருகிறார். ஆனால், நான் ஒன்றிணைப்பு குறித்து பேசியதைப் பற்றி விளக்கம் கேட்காமல் நேரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்,” எனக் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போடியில் செய்தியாளர்களிடம் பேசி,
“செங்கோட்டையனைப் பதவிகளில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம். இதற்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்,” எனக் கூறினார்.
ஆதரவாளர்களும் பதவி நீக்கம்
செங்கோட்டையனுடன் சேர்த்து, அவரது ஆதரவாளர்களான ஏழு நிர்வாகிகளும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள்:
- நம்பியூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் தம்பி (எ) ஏ.கே.சுப்பிரமணியன்
- நம்பியூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி
- கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் என்.டி.குறிஞ்சிநாதன்
- அந்தியூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.தேவராஜ்
- அத்தாணி பேரூராட்சி செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ்
- துணைச் செயலாளர் வேலு (எ) தா.மருதமுத்து
- ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் கே.எஸ்.மோகன்குமார்
இவர்கள் அனைவரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், செங்கோட்டையன் மற்றும் இவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.