செங்கோட்டையனின் கருத்துக்கு ஆதரவு: பழனிசாமி என்ன செய்யப் போகிறார்?
தமிழகத்தில் 53 ஆண்டுகளை கடந்த அதிமுக, 31 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருந்த அனுபவம் கொண்ட கட்சி. தொடர்ச்சியாக ஆட்சியை பிடித்த ஒரே கட்சியும் அதிமுகதான். தற்போது கட்சியை கையகப்படுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றத்தில் பல வெற்றிகளை பெற்றாலும், பொதுத் தேர்தலில் தோல்வி மட்டுமே சந்தித்துள்ளார். 2024 தேர்தலில் கூட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
அதே சமயம் அன்வர் ராஜா, வா.மைத்ரேயன் போன்ற மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். கட்சிப் பிளவு தான் அதிமுகவின் பல தோல்விகளுக்கும் காரணம் எனக் கூறப்படுகிறது. “கட்சி ஒன்று சேர்ந்தால்தான் திமுகவுக்கு எதிராக வெற்றி பெற முடியும்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் பழனிசாமி இதனை ஏற்காமல், கட்சி ஒன்றிணைப்பை புறக்கணித்து விட்டார். 2026 தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அவர் கடந்த ஜூலை மாதமே தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார். இந்நிலையில், ஈரோடு–கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “கட்சியை விட்டு வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் மீண்டும் சேர்க்க வேண்டும். இல்லையெனில் அவர்களை இணைத்து கட்சியை ஒருங்கிணைக்க நான் முயற்சி எடுப்பேன்” எனக் கூறினார். இந்தக் கருத்துக்கு சசிகலாவும் பன்னீர்செல்வமும் ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் அதற்குப் பின், பழனிசாமி கடும் நடவடிக்கை எடுத்தார். நேற்று செங்கோட்டையனின் மாவட்ட செயலாளர் மற்றும் அமைப்பு செயலாளர் பதவிகளை நீக்கினார். அதோடு, அவரது ஆதரவாளர்களில் 7 பேரின் பதவிகளையும் பறித்தார். இதனால் அதிருப்தி அடைந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள், முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர், “எங்களையும் கட்சி பதவிகளில் இருந்து நீக்குங்கள்” என்று பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினர்.
மேலும் சமீபத்திய கட்சியின் போக்கை விரும்பாத, மாநிலம் முழுவதும் பல அதிமுக தொண்டர்கள், செங்கோட்டையனின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையில் குரல் கொடுத்து வருகின்றனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள், “பழனிசாமி தனது தனிப்பட்ட நலனுக்காகவே கட்சி ஒன்றிணைப்பை மறுக்கிறார். கட்சி நலனுக்காக பிடிவாதத்தை தளர்த்த வேண்டும். எதற்கெடுத்தாலும் ‘அம்மாவின் அரசு’, ‘எனது தலைமையிலான அம்மாவின் அரசு’ என்று கூறி வருபவர், ஜெயலலிதாவுக்காக நிரந்தரமாக வழங்கப்பட்ட பொதுச் செயலாளர் பதவியை நீக்கி தான் இன்றைய நிலையை அடைந்துள்ளார்” என குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், “சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையனின் நடவடிக்கைகள் எந்த அளவிற்கும் பழனிசாமியை பாதிக்காது. 2026 தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சி ஒன்றிணைப்பு அவசியம் என்றாலும், பழனிசாமி அதனை ஏற்க மறுப்பார். அவரின் திட்டமிட்ட பாதையில் அவர் தொடர்வார். ஓபிஎஸ் தொடர்ந்து கட்சி ஒற்றுமையை வலியுறுத்தினாலும், இறுதியில் திமுகவிடம் தஞ்சம் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே செங்கோட்டையன் விதித்த காலக்கெடுவை பழனிசாமி பெரிதாகக் கருத மாட்டார். அவருடைய உறுதியால் 2026 தேர்தலில் அதிமுகவின் வெற்றியை அவர் உறுதி செய்வார்” என்று பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.