மதுரை பயணிகளுக்கு சிரமம்: சென்னை விமான நிலைய பிரச்சினைக்கு தீர்வு கோரி கடிதம்
சென்னை விமான நிலையத்தில் நிலவும் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடுவுக்கு, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
சமீப காலமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு பயணிக்கும் பயணிகள் அதிகமான சிரமத்தையும் மன உளைச்சலையும் அனுபவித்து வருகின்றனர். இதற்கான காரணம் அனைவரும் நன்கு அறிந்ததே. மதுரை செல்லும் ஏடிஆர் விமானங்கள் விமான நிலையத்தின் மிகத் தொலைவான பகுதியில் நிறுத்தப்படுகின்றன. அங்கு செல்ல பயணிகள் பல கிலோமீட்டர் தூரம் பேருந்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விமானப் பயணத்துக்காக வந்தவர்கள், உண்மையில் ஆகாயத்தில் பறப்பதற்கும் முன், தரையில் பேருந்தில் நீண்ட நேரம் செலவிட வேண்டிய சலிப்பில் சிக்குகிறார்கள். பேருந்துகளில் இருக்கைகள் குறைவாக இருப்பதால் மூத்த குடிமக்களும், சிறிய குழந்தைகளும் கூட நின்றபடியே பயணிக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.
சென்னை விமான நிலையம் 1,301 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதன் சுற்றுச்சுவர் எல்லையைத் தொட்டு இருக்கும் கடைசி பகுதியில், குறைந்த கட்டண பார்க்கிங் காரணமாகவே இந்த விமானங்கள் நிறுத்தப்படுகின்றன என்பது கூறப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை; மாறாக கட்டணக் கொள்கை நடைமுறைசாராமையாக உள்ளது.
மேலும், சென்னை – மதுரை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களுக்கு தற்போது ஏடிஆர் விமானங்களே இயக்கப்படுகின்றன. அதிக பயணிகள் பயன்படுத்தும் இந்த வழித்தடங்களில், ஏடிஆர் விமானங்களுக்கு பதிலாக ஏர்பஸ் விமானங்களை இயக்குவது சிறந்ததாக இருக்கும்.
எனவே, மேற்கண்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்,” என தனது கடிதத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.